முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.15 - முதல்வராக ஜெயலலிதாமீண்டும் பொறுப்பேற்ற பிறகு இந்த ஒரு ஆண்டில் மட்டுமே 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாக பள்ளி கல்வி துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம் மேனிலை பள்ளி வளாகத்தில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பள்ளி கல்வி துறை கூடுதல் செயலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி கல்வி துறை மற்றும் இளைஞர் நலன், விளை யாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியதாவது:

இந்தியா விடுதலையான பிறகு நேரு பிரதமாக இருந்தார். அவர் காலத்தில்தான் பல ஐந்தாண்டு திட்டங்கள் அமலுக்கு வந்தன. அதன் மூலம் தொழிற்சாலைகள், அணைகள் உள்ளிட்ட பல பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குழந்தைகள் மீது நேரு மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அதனால் தான் அவருடைய பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செய்து வருகிறார். இந்திய அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும் என்பதற்காக இலவச திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.

கல்விக்காக கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.13,313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வுக்கூடங்கள், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க ரூ.1,890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இந்த ஆண்டு மட்டும் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 2006- 2011 ஆண்டுகளில் 58,000 ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டனர். ஆனால் 2001- 2006 ஆண்டுகளில் 61,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது ஒரே ஆண்டில் 55,000 ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம்.

பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டம் தமிழகத்தில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இவ்விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மணி உள்பட கல்வித்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்