முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவிலில் நடை திறப்பு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, நவ.16 - இந்த ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பாசாமி கோவில் திருநடை 16-ந் தேதி (புதன் கிழமை) இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி புதிய மேல்சாந்திகள் பதவியேற்றுக் கொள்கிறார்கள். இது பற்றி விபரம் வருமாறு:- தென்இந்தியாவில் உள்ள மிகப்பெரிய முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்று சபரி மலை 18 மலைகளுக்கும் அதிபதியான அய்யப்பசாமி குடிகொண்ட சபரிமலை அய்யப்பசாமி கோவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டையில் இருந்து 68 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவிலில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2012) ஜனவரி மாதம் 15-ந் தேதியும் நடைபெறுகிறது.

2011-21-ம் ஆண்டின் மண்டல மகர வளக்கு பூஜை திருவிழாக்களுக்காக இன்று 16-ந் தேதி (புதன் கிழமை) மாலை 5.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்படுகிறது. நடையை கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில் மேல்சாந்தி எழிக்கோடு சசி நம்பூதிரி குத்துவிளக்கு ஏற்றி திரு நடையை திறந்து வைக்கிறார்.

முன்னதாக காலை புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. சபரி மலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலமுரளி, மாளிகையை புறத்தமன் கோவில் புதிய மேல்சாந்தியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் நம்பூதிரி ஆகியோருக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு பூஜை மந்திரங்கள் சொல்லிக் கொடுக்கிறார்.

தொடர்ந்து 17-ந் தேதி (நாளை) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பாலமுரளி மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பசாமி கோவில் நடையை திறந்து வைத்து, பூஜை வழிபாடுகளை நிறைவேற்றுகிறார். புதிய மேல்சாந்திகளுக்கான பதவி காலம் ஓராண்டு ஆகும்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் நடைதிறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு, தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை செய்து கொடுக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நடப்பு சீசனையொட்டி, கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 600 சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்படுகிறது. அதேபோல் சபரிமலை வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு நிலைக்கல் பகுதியில் கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்கு கேரள போலீசார், கமாண்டோ படையினர் உள்பட 3 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்