முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுரேனியம் ஏற்றுமதி: ஆஸி.க்கு இந்தியா வரவேற்பு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

பெங்களூர், நவ.16 - இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ள ஆஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியா கில்லார்டுவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு பிறகு இந்தியாவில் அணு மின் நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அணு மின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவுக்கு சப்ளை செய்ய முடியாது என்று ஆஸ்திரேலிய அரசு இதுவரை கூறிவந்தது. ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவின் புதிய பெண் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஜூலியா கில்லார்டு இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளார். 

சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் விற்பனை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் இந்தியாவுக்கு விற்பனை செய்வதில் ஒரு அர்த்தம் உள்ளது என்று ஜுலியா கில்லார்டு சமீபத்தில் கூறியிருந்தார். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த பேச்சு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். 

இந்தியாவின் அணு மின்சார நிலையங்களுக்கு தேவையான யுரேனியத்தை ஆஸ்திரேலியாவிடம் இருந்து வாங்குவது குறித்து விரைவில் பேச்சு நடத்தப்படும் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கனவே நல்லுறவு நிலவிவரும் நிலையில் ஆஸி.பிரதமரின் இந்த அறிவிப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார். 

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால்தான் இந்தியாவுக்கு யுரேனியத்தை சப்ளை செய்ய முடியாது என்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தடைபோட்டு இருந்தது. ஆனால் இப்போது ஆஸி. பெண் பிரதமரின் அறிவிப்பு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் யுரேனியத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் மூன்றாவது மிகப்பெரிய நாடு ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்