பிரதமர் வேட்பாளர் அத்வானி தான்: ஜஸ்வந்த்

Image Unavailable

 

புது டெல்லி, நவ.19 - நாடாளுமன்றத்துக்கு விரைவிலேயே இடைத் தேர்தல் வரலாம். மேலும் அடுத்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் பதவிக்கு அத்வானிதான் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங் கூறியுள்ளார். அத்வானி பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. இதனால்தான் ஊழலுக்கு எதிராக அவர் நடத்தி வரும் ரத யாத்திரையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கவில்லை. மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பரிந்துரையால் பா.ஜ.க தலைவராக்கப்பட்ட நிதின் கட்காரியும் இந்த யாத்திரையில் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இந்த ரத யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என தனது கட்சியின் தலைவர்களுக்கே கட்காரி உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. 

அத்தோடு யாத்திரையை தொடங்கும் முன்பே பிரதமர் பதவி போட்டியில் நான் இல்லை என்று அத்வானியை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியையே பிரதமர் பதவிக்கு முன்நிறுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். விரும்புவதாகவும் தெரிகிறது. 

இந்த நிலையில் வழக்கமாகவே ஆர்.எஸ்.எஸ். சிடம் இருந்து ஒதுங்கி நிற்கும் பா.ஜ.க. மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங் பிரதமர் பதவிக்கு அத்வானிதான் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் இந்தி பிரிவுக்கு ஜஸ்வந்த்சிங் அளித்துள்ள பேட்டியில் நாட்டில் விரைவிலேயே இடைத் தேர்தல் வரும். அப்போது அத்வானியைத்தான் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க.வில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அத்வானிதான் எங்களது மூத்த தலைவர். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பிரதமர் பதவிக்கு அவரையே பா.ஜ.க. முன் நிறுத்தும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். எனது தனிப்பட்ட விருப்பமும் அதுதான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ