முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் டவர் வெடித்து சிதறியது பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. 19 - வடசென்னை மூலகொத்தளத்தில் உள்ள விடுதி மாடியில் நிறுவப்பட்டிருந்த செல்போன் டவர் இன்று காலை தீப்பிடித்து வெடித்து சிதறியது. பீதியில் மக்கள் ஓட்டம் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மூலகொத்தளம் பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இதன் மொட்டை மாடியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 செல்போன் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. டவர் அருகே உள்ள கட்டுப்பாட்டு அறையில் இன்று காலை 10 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. உள்ளே இருந்த கட்டுப்பாட்டு கருவி, மின்சாதனங்கள் வெடித்து சிதறியதால் பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளில் டவரிலும் தீப்பற்றியது. அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.

குண்டு வெடித்ததுபோல சத்தம் கேட்டதால் விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். ரோட்டில் வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பேசின்பிரிட்ஜ் உள்பட பல இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கட்டுப்பாட்டு அறையில் தீப்பிடித்தது எப்படி என்று விசாரணை நடத்துகின்றனர். டவர் எரிந்ததால் மூலகொத்தளம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் செல்போனுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. பிஎஸ்என்எல் ஊழியர்கள் வந்து டவர் பகுதியில் மின் இணைப்பை உடனடியாக துண்டித்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள வீட்டு மாடிகளில் ஏராளமான செல்போன் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிக வாடகை கிடைக்கிறது என்ற ஆசையில் வீட்டின் உரிமையாளர்கள், செல்போன் டவர் அமைக்க தாராளமாக அனுமதி தருகின்றனர். மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில்கூட செல்போன் நிறுவனங்கள் சர்வசாதாரணமாக டவர் வைத்து விடுகின்றனர். டவர் கட்டுப்பாட்டு அறைக்கு போதிய பாதுகாப்பு இருக்காது. நெருக்கடி மிகுந்த இடத்தில் இருப்பதால் தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பங்கள் நடக்கும்போது உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் பலமாக காற்று வீசும்போது டவர் சாய்ந்துவிடுவதும் உண்டு. எனவே, செல்போன் நிறுவனங்கள் டவர் வைப்பதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதிகாரிகளும் இதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்