வோடபோன், ஏர்டெல் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி ரெய்டு

Image Unavailable

 

புது டெல்லி, நவ. 20- 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பையில் உள்ள வோடபோன் அலுவலகத்திலும், கூர்கயானில் உள்ள ஏர்டெல் அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.  மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக பிரமோத் மகாஜன் பதவி வகித்த காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் ஷியாமல்கோஷ் மற்றும் இருவர் மீதும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஜே.ஆர். குப்தா மற்றும் தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் ஷியாமல்கோஷ் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

வழக்கு பதிவு செய்த பிறகே சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பையில் உள்ள வோடபோன் அலுவலகத்திலும், கூர்கயானில் உள்ள ஏர்டெல் அலுவலகத்திலும் மற்றும் ஷியாமல்கோஷ், குப்தா ஆகியோரது இல்லங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை பற்றி பாரதி ஏர்டெல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் எப்போதுமே உயர்ந்த தரத்தை கடைப்பிடித்து வருகிறோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள் அரசின் கொள்கைப்படியேதான் ஒதுக்கப்பட்டன என்று விளக்கமளித்தார். இந்த விவகாரத்தில் நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் அவர் கூறினார். இந்த அதிரடி சோதனைகள் மும்பையிலும், கூர்கயானிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ