முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பம்: பாராளுமன்றம் நாளை கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 21 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை செவ்வாய்க் கிழமையன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு பிரச்சினைகள் மற்றும் ஊழல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் இந்த கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடர் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நீடிக்கும். முதல் நாளான நாளைய தினம் விலைவாசி பிரச்சினையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நெருக்கடியை காங்கிரஸ் சமாளிக்குமா என்பதுதான் இன்றைய கேள்வி.  இடதுசாரிகளை பொறுத்தவரையில் பொதுவான பிரச்சினைகளில் மற்ற கட்சிகளோடு இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அரசை எதிர்க்கும் மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு எதிலும் ஒரு முடிவுக்கு வருவோம் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். முன்னதாக, பாராளுமன்றம் கூடும் முன்பு இன்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் கூடுகிறது. அதற்கு பிறகு மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சபையில் செயல்படுவது குறித்து பாரதீய ஜனதா ஆலோசித்து முடிவெடுக்கும். இந்த விஷயத்தில் ஒரு பொதுவான யுக்தியை வகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இந்த மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத் தொடரில் பேசப்படும் என்று தெரிகிறது. உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, தனது மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்கப் போவதாக ஒரு திட்டத்தை அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இது குறித்தும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதம் எழுப்பப்படும் எனத் தெரிகிறது.  மற்றொரு முக்கிய அம்சம், தெலுங்கானா மாநில விவகாரம். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி அந்த மாநிலத்தில் கடந்த பல நாட்களாகவே போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கவே மாட்டோம் என்று தெலுங்கானா பகுதி எம்.பிக்களும் அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தாலும் பாராளுமன்றத்தில் புயல் வீசக்கூடும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அது தொடர்பாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சில முன்னாள் செயலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வோடபோன், ஏர்டெல் அலுவலகங்களிலும் அதிரடி சோதனைகள் நடந்துள்ளன. இந்த விவகாரமும் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடிக்கலாம். 

பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இந்த விவகாரமும் சபையில் எழுப்பப்படலாம். மொத்தத்தில் விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பல பிரச்சினைகளை எழுப்பி சபையில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் ஆளும் அரசான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சற்று கலங்கிப் போயிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்