முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்தில் 43 பயணிகள் ரயில் ரத்து - துணை ராணுவம் குவிப்பு

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

நகரி,மார்ச்.11 - ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறது. கடந்த மாதம் முதல் தனி மாநில போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இக்குழுவின் தலைவர் பேராசிரியர் கோதண்டராம் ஐதராபாத்தில் 10 லட்சம் தெலுங்கானா ஆதரவாளர்கள் பங்கேற்கும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. தெலுங்கானா பகுதிகளில் இருந்து ஐதராபாத்திற்கு வரும் 43 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் தெலுங்கானா பகுதிகளில் இருந்து ஐதராபாத் வரும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஏராளமான செக்போஸ்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஐதராபாத் நகரில் உள்ள தெலுங்கானா ஆதரவாளர்களை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. பல்கலைக்கழகத்தை சுற்றி அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத் நகரில் மட்டும் 20 கம்பெனி துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதட்டமான பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் வெளியில் யாரும் கூட்டம் போட்டு பேச முடியாது. இதை மீறுபவர்கள் மீது ராணுவத்தினர் தடியடி நடத்தினர். 

ஐதராபாத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா ஆதரவாளர்கள் சட்டசபையை முற்றுகையிட திட்டமிட்டிருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபைக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு தலைவர்கள் கூறும் போது, நாங்கள் திட்டமிட்டபடி ஐதராபாத்தில் பிற்பகலில் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்துவது உறுதி. இதை யாரும் தடுக்க முடியாது என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்