பா.ஜ.க.கூட்டணிக்கு வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் இல்லை: அத்வானி

Image Unavailable

புதுடெல்லி, நவ.- 21 - வெளிநாட்டு வங்கிகளில் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி  கட்சியினருக்கு கறுப்புப் பணம் இல்லை என்ற உறுதிமொழியை நாடாளுமன்ற எம்.பி.க்கள் அறிவிப்பார்கள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உறுதியளித்தார். ஊழலுக்கு எதிராக எல்.கே.அத்வானி மேற்கொண்ட ஜன சேத்னா யாத்திரை டெல்லி ராம்லீலா மைதானத்தில் நிறைவுபெற்றது. இந்த யாத்திரையை 22 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்கள் வழியாக கடந்த 38 நாட்களாக அத்வானி மேற்கொண்டார். ஞாயிறன்று நடைபெற்ற நிறைவு விழாவில் அத்வானி பேசியதாவது:- வெளிநாட்டு வங்கிகளில் பணமோ அல்லது சொத்துக்களுக்கான ஆவணங்களோ தங்களுக்கு இல்லை என்ற உறுதிமொழிக் கடிதத்தை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நவம்பர் 22 ம் தேதிக்குள் மக்களவைத் தலைவர் மீராகுமாரிடமும், மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடமும் அளிப்பார்கள். ஊழலை ஒழிக்க மத்திய அரசுக்கு போதுமான மன உறுதி இல்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமோதான் ஊழலை ஒழிக்க முடியும். ஊழலுக்கு எதிரான பா.ஜ.க.வின் யாத்திரை தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஆனால் ஊழல் அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர்கள் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, ராஜ்நாத்சிங், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், சிவசேனா அனந்த்கீத், இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே, அ.தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் தம்பித்துரை ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நிதின் கட்காரி கூறுகையில், மக்களவையில் ஓட்டுக்குப் பணம் தரப்பட்ட விவகாரத்தை வெளிக்கொணர்ந்த பா.ஜ.க.வினரை கைது செய்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகனும் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ