முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.மாநிலத்தை 4-ஆக பிரிக்க எதிர்ப்பு பார்லி.யில் அமளி: சபை ஒத்திவைப்பு

புதன்கிழமை, 23 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.- 23 - உத்திரபிரதேச மாநிலத்தை 4 ஆக பிரிக்க அம்மாநில அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு லோக்சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் லோக்சபை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது.இந்த கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா, கல்வி சீர்திருந்த மசோதா, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய மசோதா, குழந்தைகளை பாதுகாக்கும் மசோதா, பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா உள்பட பல்வேறு மசோதாக்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கூட்டத் தொடரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஒவ்வொரு பிரச்சனையை கையில் எடுத்துள்ளன. பாராளுமன்றம் துவங்கிய முதல்நாளே இந்த பிரச்சனைகள் எதிரொலிக்க துவங்கிவிட்டன. லோக்சபை நேற்று காலை 11 மணிக்கு துவங்கியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மீராகுமார், புகழாரம் சூட்டி அவர்களை நினைவுகூர்ந்தார். இந்த நிகழ்வு முடிந்த மறு நிமிடமே பலத்த சர்ச்சை கிளம்பியது. சபாநாயகர் மீராகுமார் சபை அலுவல்கள் தொடங்க கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து தங்கள் தங்கள் பிரச்சனைகள் எழுப்பினர். உத்தரபிரதேச மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள்  தெலுங்கானா பிரச்சனையை கிளப்பினார்கள். இதற்கிடையில் கேள்விநேரத்தை தொடங்குமாறு சபாநாயகர் மீராகுமார் அழைப்பு விடுத்தார். இதையடுத்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளிக்க தமது இருக்கையில் இருந்து எழுந்தார். உடனே பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்கள் இருக்கைகளில் இருந்த எழுந்தனர். 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய  வேண்டும் என்று கோஷமிட்டனர்.  இதையடுத்து மதியம் 12 மணிவரை லோக்சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் லோக்சபை 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. சபையை அமைதிப்படுத்த சபாநாயகரால் இயலவில்லை. இந்த அமளிக்கிடையே பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர்கள் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். சிவசேனா எம்.பி.க்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். சபாநாயகர் பலமுறை கேட்டுக்கொண்டும் எந்த ஒரு கட்சியும் அமைதிகாக்கவில்லை. இதனால் நாள் முழுவதும் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்ற ராஜ்யசபையிலும் இதே நிலைதான் காணப்பட்டது. 11 மணிக்கு சபை கூடியதும், அவையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அடுத்த நிமிடம் எதிர்க்கட்சியினர் எழுந்து கோஷங்களை முழங்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.  பாராளுமன்றத்தின் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறாமல் முதல்நாள் முற்றிலும் முடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்