முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசி உயர்வு, தனித்தெலுங்கானா, கறுப்புப்பணம் பாராளுமன்றத்தில் கடும் அமளி:

புதன்கிழமை, 23 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.- 24 - பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நேற்று இரண்டாவது நாளாக விலைவாசி உயர்வு, தனித் தெலுங்கானா, கறுப்புப்பணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு சபைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.  பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. அப்போது விலைவாசி உயர்வு, கறுப்புப்பணம், தனித்தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நேற்று முன்தினம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.  நேற்று இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தின் இரு சபைகளும் கூடின. அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. ராஜ்யசபையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சபையின் மைய பகுதியை நோக்கி விரைந்தனர். விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட இடதுசாரி எம்.பி.க்களுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்களும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆனால் பா.ஜ.க. எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு போகாமல் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே கறுப்புப்பணம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் தொடர்பாக தாங்கள் கொண்டுவந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபை தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி சப்தம் போட்டனர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சபையை நண்பகல் 12 மணிவரை சபைத் தலைவர்  ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். இதேபோல லோக்சபையிலும் நேற்று பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. லோக்சபையில் நேற்று கறுப்புப்பணம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை பா.ஜ.க. எம்.பி.க்கள் கொண்டுவந்தனர். தங்களது இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். லோக்சபையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து புறக்கணிக்கப் போவதாகவும் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூறினர். தனித் தெலுங்கானா பிரச்சனை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.பி.க்கவளின் கோஷத்திற்கு ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்,  தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும்  எதிர் கோஷங்களை எழுப்பினர்.   தென்னிந்தியாவில் ஒரு அணைக்கு சேதம் ஏற்படுவது போன்று எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி பல்வேறு கட்சிகளும் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி ஆள் ஆளுக்கு கோஷங்களை எழுப்பியதால் சபையில் இரைச்சல் அதிகரித்தது. யார் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழாத அளவுக்கு கூச்சல் அதிகமாக இருந்தது. இதையடுத்து நேற்று நண்பகல் 12 மணி வரை லோக்சபையை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். பிறகு சபை மீண்டும் கூடியபோது, இதே பிரச்சனைகளை முன்வைத்து பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்ததால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சபை அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து சபை நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக ஜார்க்கண்ட் ரயில் தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர்  பலியானதற்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியபிறகுதான் சபை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதால் பாராளுமன்றத்தில் அவரை தொடர்ந்து புறக்கணிக்கப் போவதாக பா.ஜ.க. கூறியுள்ளது.
லோக்சபையில் பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியபோதிலும் மத்திய அமைச்சர்கள் சிலரை அழைத்து அவர்கள் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம் என்று சபாநாயகர் மீரா குமார் கூறினார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி ஒருபுறம் நடக்க, இன்னொருபுறம்  நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விலைவாசி உயர்வு தொடர்பாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். இதேபோல மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வஃப் திருத்த மசோதா தொடர்பான தேர்வுக்குழு குறித்த தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்