முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு நேற்றும் ஜாமீன் கிடைக்கவில்லை விசாரணை தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 26 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழிக்கு நேற்றும் ஜாமீன் கிடைக்கவில்லை. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் முதல் முறையாக 2 தினங்களுக்கு முன்பு 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்தது. அதாவது யூனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் குழும நிர்வாகிகள் கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா, ஹரிநாயர் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.  இந்த ஐவருக்கும் ஜாமீன் கிடைத்ததுமே அவர்களது உறவினர்கள் அதை கோர்ட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்தனர். கோர்ட் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்த இவர்களை சிறப்பு நீதிபதி ஷைனி கடுமையாக எச்சரித்து வெளியேற்றியது நினைவிருக்கலாம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேற்கண்ட ஐவருக்கும் ஜாமீன் கிடைத்துமே தனக்கும் ஜாமீன் கிடைத்து விடும் என்று கனிமொழி நம்பினார்.  இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 1 ம் தேதிதான் விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், இந்த விசாரணையை விரைவாக நடத்தக் கோரியும் அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி கனிமொழிக்கு நேற்றும் ஜாமீன் கிடைக்கவில்லை.  இவருடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்ட மேலும் ஐவரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதாவது, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகான் ப்ரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த்த பெகுரா ஆகியோரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கும் நேற்று ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி வி.கே.  ஷாலி முன்னிலையில் நேற்று முழுவதும் கனிமொழி ஜாமீன் மனு மீதான விவாதங்கள் நடைபெற்றன.  ஆனாலும் கனிமொழி எதிர்பார்த்தபடி அவருக்கு நேற்றும் ஜாமீன் கிடைக்கவில்லை. திங்கட்கிழமை மீண்டும் இது தொடர்பான விவாதங்களை கேட்போம் என்று நீதிபதி ஷாலி அறிவித்தார். இதனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற அவரது குடும்பத்தாரின் எதிர்பார்ப்பும், கட்சியினரின் எதிர்பார்ப்பும் பொய்யாகி போனது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்