முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளச்சேத பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.30 - தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண தொகை அறிவித்துள்ள முதல்வர், சென்னை சாலைகளை சீரமைக்க ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளார். பயிர் சேத விபரங்களை கணக்கிட்டு அறிவிக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையையடுத்து, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளான எண்ணூர், புழல், செம்பரம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோளிங்கநல்லூர், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளை வான் வழியாக இன்று நான் பார்வையிட்டேன். வடகிழக்கு பருவமழை தொடங்கிய உடன், முதற் கட்டமாக 7.11.2011 அன்று மூத்த அமைச்சர்கள், துறை தொடர்புடைய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினேன்.  

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கனமழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு வழக்கம் போல் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 5,000 ரூபாய் உதவித் தொகையும், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு 2,500 ரூபாய் உதவித் தொகையும், கால்நடைகளை இழந்தவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், கனமழையால் இதுவரை உயிரிழந்த 92 நபர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம் 1 கோடியே 84 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு 25.30 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், முழுமையாக சேதமடைந்த 1,121  குடிசைகள் மற்றும் வீடுகள், பகுதியாக சேதமடைந்த 4,146 குடிசைகள் மற்றும் 4,142 வீடுகளுக்கு 3 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும், மழை சூழ்ந்துள்ளதன் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 36 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கப்பட்டு உள்ளன. 

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் அளவு சராசரி மழையை விட 40 விழுக்காடு அதிகமாக இருந்தும்,  சென்ற ஆய்வுக் கூட்டத்தில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுக்க உத்தரவிட்டதன் காரணமாக, கடுமழையினால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை நேற்று நான் வான் வழி மூலம் பார்வையிட்ட பின், இது குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டத்தினை இன்று நான் நடத்தினேன். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக அளிக்க உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், கனமழை காரணமாக பழுதடைந்த சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செப்பனிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.  சாலைகள் செப்பனிடுவதற்காக உடனடி ஒதுக்கீடாக 150 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  

இதே போன்று, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து உடனடியாக சேதத்தின் மதிப்பினை கணக்கிடுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், மழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்