முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரண தண்டனை ரத்தை எதிர்க்கவில்லை: தமிழக அரசு மனு

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.30 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளனின் மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு எதிர்க்கவில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தார். இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவை பத்திரிகைகள் தவறாக புரிந்து கொண்டதாக உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா விளக்கம் அளித்து கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளனின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்த மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது கோர்ட்டில் நடந்த விவாதம் வருமாறு:-

மத்திய அரசு வக்கீல் எம்.ரவீந்திரன், பஞ்சாபை சேர்ந்த முல்லர் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்தியாவில் தூக்குத் தண்டனையை பெற்றவர்கள் மாநில ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ள கருணை மனுக்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதுவரை இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும். 

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வைகோ, இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜனவரி 11-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதுவரை இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும். 

தமிழக அரசின் தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணன்: இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த பதில் மனு பத்திரிகைகளில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அரசு கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

இந்த மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தான் தெரிவிக்கப்பட்டது. அதனால் இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசின் பதில் மனுவை கண்டு வைகோ அதிருப்தி அடைந்தார். இப்போது அவர் திருப்தி அடைவாரா? அதனை வைகோ கோர்ட்டில் பதிவு செய்ய வேண்டும். 

வைகோ: (சிரித்துக் கொண்டே) சரி என்றார். 

நீதிபதிகள்: இந்த கோர்ட்டும் இதை புரிந்து கொண்டது. 

இவ்வாறு விவாதம் நடந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 31-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். 

இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவை செய்தி ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டன. ஆகவே, இந்த கூடுதல் மனு தாக்கல் செய்கிறோம். இந்த கோர்ட்டின் வாயிலாக தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று இந்த மூவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களின் கருணை மனு மீது முடிவு எடுக்க குடியரசு தலைவர் 11 ஆண்டு காலம் தாமதம் செய்ததை காரணமாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதைபற்றி தமிழக அரசு கருத்து கூற விரும்பவில்லை. 

குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவு கிடைத்த பின்னர் தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையைத்தான் எடுத்தது. அதே நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தி 30.8.2011-ல் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசுத் தலைவர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago