முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி 58 சதவிதமாக உயர்வு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.1 -தமிழ்நாட்டில் எட்டு போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு அகவிலைப்படியை 51 சதவிதத்திலிருந்து 58 சதவிதமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கும் வகையில், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படியை 51 விழுக்காட்டிலிருந்து 58 விழுக்காடாக 1.7.2011 முதல் உயர்த்தி வழங்கவும், அதற்கான நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்கவும் கடந்த அக்டோபர் மாதம் நான் ஆணையிட்டேன். 

இதேபோன்று, தமிழ் நாட்டில் இயங்கி வரும் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும்  தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியையும், 51 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக  1.7.2011 முதல் உயர்த்தி வழங்க நான் தற்போது ஆணையிட்டுள்ளேன். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவையின்றி ரொக்கமாக 1.7.2011 முதல் வழங்கப்படும்.  இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக, அரசு  போக்குவரத்துக்  கழகங்களுக்குக்  கூடுதலாக  மாதம் ஒன்றுக்கு  9  கோடியே  15  இலட்சம்   ரூபாய்   செலவாகும்.  இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 261 அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் பயன் பெறுவர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும் மேன்மேலும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் கடமையாற்ற வழி வகைசெய்யும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்