முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.அழகிரி எம்.பி. அலுவலகம் அகற்றம்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, டிச.1 - மதுரை தெற்கு மண்டல அலுவலகத்தில் இருந்த மு.க.அழகிரி எம்.பி.யின் அலுவலகத்தை உடனடியாக அகற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் முதல் கூட்டம் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் நடராஜன், துணை மேயர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் மேயர் ராஜன் செல்லப்பா திருக்குறளை வாசித்தார். இதனைத் தொடர்ந்து துணை மேயர் கோபாலகிருஷ்ணன் தீண்டாமை உறுதிமொழியை வாசித்தார். பின்னர் மேயர் ராஜன்செல்லப்பா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானத்தை வாசித்தார். அப்போது மேயர் குறிப்பிடுகையில், மதுரையில் அஞ்சாநெஞ்சர் என்று தம்பட்டம் அடித்தவர்கள் எல்லாம் இப்போது அஞ்சி ஓடிவிட்டதால் மதுரை மக்களாகிய நீங்கள் அனைவரும் அஞ்சாநெஞ்சர்கள் ஆகிவிட்டீர்கள் என்று மதுரை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதை எடுத்துக்கூறினார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து தி.மு.க. கவுன்சிலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதனால் மாமன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து மேயர் ராஜன் செல்லப்பா தீர்மானத்தை வாசித்து முடித்தார். தமிழக முதலமைச்சரை பாராட்டும் தீர்மானத்தின் மீது இப்போது விவாதம் தொடங்குகிறது என்று மேயர் ராஜன் செல்லப்பா கூறிவிட்டு தெற்குமண்டல தலைவர் சாலைமுத்துவை பேச அழைத்தார். 

மாமன்ற கூட்டத்தின் முதலில் எதிர்க்கட்சி தலைவரை பேச அழைக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மண்டல தலைவர் சாலைமுத்து எழுந்து, முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் மட்டுமல்ல, மதுரை மாநகரில் முதல்வர் அம்மாவின் ஆட்சி மலர்ந்தபின்புதான் மதுரை மாநகர மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகாலமாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் மு.க.அழகிரியின் அட்டூழியத்தால் கெட்டழிந்துவிட்டது. சீரழிந்துவிட்டது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத அளவிற்கு மாநகராட்சி நிர்வாகம் முடங்கிப்போய் விட்டது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சீர்குலைந்த மாநகராட்சியை சீர்செய்யும் பொறுப்பை மக்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். நமது மேயர் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர். மதுரை மக்களைப் பற்றி நன்கு அறிந்தவர். அதற்காகத்தான் அவருக்கு ஒட்டுமொத்த வாக்காளர்களும் வாக்களித்து அமோக வெற்றியை பெறச் செய்திருக்கிறார்கள். எனவே நாம் மக்கள் பணியை செம்மையாகச் செய்ய வேண்டும். மு.க. அழகிரியின் கொள்ளை கும்பலிடம் இருந்து மதுரையை மீட்டெடுத்து, மாநகராட்சியையும் கைப்பற்றி என்னைத் தெற்கு மண்டலத் தலைவராக தேர்ந்தெடுத்த முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்கெல்லாம் தாயாக இருந்து காத்து வருகின்ற அந்த தாயின் வழியில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலத்தலைவர் கே.ராஜபாண்டியன் பேசியதாவது:-

மதுரையை மீட்டெடுத்து என்னை மேற்கு மண்டலத் தலைவராக பதவியேற்க வைத்த முதல்வர் அம்மாவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக தி.மு.க.வினரின் கரத்தில் சிக்கி மாநகராட்சி சின்னாபின்னமாகிவிட்டது. அஞ்சா நெஞ்சன் என்று கூறிக்கொள்ளும் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே கூறிவருகிறார்கள். அவர்களது மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். மதுரை மாநகர் உலக அளவில் கோவில் மாநகர் என்று சிறப்புப்பெற்றது. சங்கம் வளர்த்த மதுரையில்தான் திருக்குறள் எழுதப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தூங்கா நகர் என்று பெயர்பெற்ற மதுரை மாநகரில் தூங்காத மீன்கொடி ஏந்தி மீனாட்சி தாய் ஆட்சி செய்வதால்தான் தூங்காநகரம் என்று மதுரை பெயர்பெற்றது. அப்படிப்பட்ட மதுரையிலே வாழுகின்ற மக்கள் முதல்வர் அம்மாவுக்கு வாக்களித்து நம்மையெல்லாம் அமோக வெற்றிபெறச் செய்துள்ளார்கள். அவர்கள் நம்மிடம் ஏராளமான எதிர்பார்ப்புகளை முன்வைத்துள்ளார்கள். மக்களின் அந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்ற வேண்டும். இதற்கெல்லாம் நிதி ஆதாரம் திரட்ட வேண்டும். முதல்வர் அம்மாவிடம் நீங்கள் (மேயர்) எடுத்துக்கூறி நிதியை பெற வேண்டும். அம்மாவின் அருகில் இருந்தவர்தான் நமது மாநகராட்சி கமிஷனராக இருக்கிறார். சாமிக்கு அருகில் இருந்த பூசாரிதான் நமது மாநகராட்சி கமிஷனர். அவரும் மேயரும் சேர்ந்து அம்மாவை சந்தித்து அதிக  நிதியை பெற்று மதுரை மக்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

வடக்கு மண்டலத் தலைவர் கே.ஜெயவேல் பேசியதாவது,

என்னை இரண்டாவது முறையாக வடக்கு மண்டல தலைவராக நியமித்த முதல்வர் அம்மாவுக்கும் 3-வது முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுத்த 47-வது வார்டு பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து மக்கள் பணியை ஆற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

கிழக்கு மண்டல தலைவர் மு.இராஜபாண்டியன் பேசியதாவது:-

அடிமட்ட தொண்டனாகிய என்னை மண்டல தலைவராக உருவாக்கிய முதல்வர் அம்மாவுக்கு என்  நன்றியை காணிக்கையாக்குகிறேன். கடந்த ஆட்சிக்காலத்தில் மதுரை மாநகராட்சியை தி.மு.க.வினர் சீர்கெட்ட நிர்வாகத்தால் சீரழித்து விட்டார்கள். அவற்றையெல்லாம் நாம் சீர்செய்ய வேண்டும். மதுரை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார். 

இதனைத் தொடர்ந்து நிலைக்குழு தலைவர்கள் எஸ்.டி.ஜெயபாலன், கண்ணகி பாஸ்கரன், கே.முனியாண்டி, ஏ.சுகந்தி, ஆனையூர் சரவணன் ஆகியோர் நன்றி தெரிவித்து பேசினார்கள். இவர்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்து பேசினார்கள். இதன் பின்பு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் செல்லம் பேசினார். அப்போது வெளியே சென்ற தி.மு.க. கவுன்சிலர்கள் மீண்டும் மாமன்றத்திற்குள் வந்தனர். அவர்கள் மேயர் ராஜன் செல்லப்பாவிடம் எங்களுக்கும் பேச வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டனர். அதற்கு மேயர் ராஜன் செல்லப்பா பதிலளித்து பேசுகையில், இது முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்துகொண்டிருப்பதால் உங்களில் யார் யார் பேசுவது என்ற பட்டியலை என்னிடம் கொடுங்கள். அதன்பின்னர் நான் வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத தி.மு.க. கவுன்சிலர்கள் மீண்டும் அவையில் இருந்து வெளியேறிவிட்டனர். 

அதன் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் இயங்கிவந்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் மு.க.அழகிரியின் அலுவலகம் அகற்றம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விபரம் வருமாறு:-

மதுரை மேலமாரட் வீதியில் தெற்கு மண்டல அலுவலகம் இயங்கிவந்த காலத்தில் 19 வார்டுகள் இருந்தன. தற்போது மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்கு பின் 26 வார்டுகளை உள்ளடக்கி இயங்கிவருகிறது. இந்த அலுவலக தரை தளத்தில் சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மண்டல அலுவலக பணியாளர்களுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் ஆவணங்கள் வைப்பதற்கும் ஊழியர்கள் வேலை செய்வதற்கும் இடம் தேவைப்படுகிறது. மேலும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் 2009 அக்டோபர் மாதம் முதல் செயல்படவே இல்லை. எனவே மாநகராட்சி விரிவாக்கத்திற்குப்பின் தெற்கு மண்டல அலுவலகம் போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வருவதால் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கிவந்த 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அலுவலகத்தை தெற்கு மண்டல அலுவலகம் திரும்ப எடுத்துக்கொள்வது அவசியமாவதால் கடந்த 24.9.2009 ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மீண்டும் தெற்கு மண்டலத்திற்கு திரும்ப எடுத்துக்கொள்வதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்