முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் குடும்பத்தார் - நண்பர் மீது புகார்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.1 - தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மிரட்டி அதிகார துஷ்பிரயோகம் மூலம் விலைக்கு வாங்கி அபகரித்து கொண்டதாக மு.க.ஸ்டாலின் அவரது உதவியாளர் ராஜா சங்கர், ஓட்டல் அதிபர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். இதுபற்றி விபரம் வருமாறு:-

சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரீஸ் சாலையில் வசித்து வருபவர் என்.எஸ்.குமார் (எ) சேஷாத்திரிகுமார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தான் பாதிக்கப்பட்டது பற்றி புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்க மறுத்ததால் தற்போது நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் தெரிவிதிருப்பதாவது:-

நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தந்தையார் காலஞ்சென்ற நாராயணசாமியால் வாங்கப்பட்டு விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன்தாஸ் சாலை என்று எனது தந்தையால் பெயர் சூட்டப்பட்ட இடத்தில், எனது குடும்பத்தினருக்காக வாங்கப்பட்ட இடத்தில் எனது பங்கிற்காக கிடைத்த 2 1/2 கிரவுண்டு இடத்தில் நான் 4445 சதுர அடி கட்டிடம் கட்டி வசித்து வந்தேன். பின்னர் இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக இந்த 6 கிரவுண்டு நிலத்தை மு.க.ஸ்டாலின் ஐசிஐசி வங்கி மூலம் வாங்கி குடியேறினார். அவர் அங்கு வந்ததிலிருந்து  அருகேயுள்ள எனது வீட்டையும் வாங்கி ஒரே வீடாக்கிவிட திட்டமிட்டார். அதற்காக அங்கு குடியிருந்தவரை மிரட்டி வீட்டை காலிசெய்ய வைத்தனர். அதன்பிறகு தேவி பழனிச்சாமி என்பவருக்கு மாதம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்திருந்தேன். மு.க.ஸ்டாலின் குடும்பத்தார் அவரையும் கட்டாயப்படுத்தி வீட்டை காலிசெய்ய வைத்து விட்டார்கள். அத்துடன் சுப்பா ரெட்டி (சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரி ஹோட்டல் அதிபர்), ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து எனது சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள். இல்லையென்றால் எனக்கு பல பிரச்சினைகள் வரும் என்று மிரட்டினார்கள்.

அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்துபோய் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 16.7.2010 அன்று புகார் செய்ய சென்றேன். எனது மனுவை வாங்க மறுத்துவிட்டார்கள். அதன்பிறகு பத்திரப் பதிவாளரை எனது வீட்டிற்கு அழைத்து வந்து பி.வேணுகோபால் ரெட்டி பெயரில் எனது வீட்டை கிரயம் செய்து கொண்டார்கள். 5 1/2 கோடி (5,54,50,000) ரூபாய் டி.டி. ஆக கொடுத்தார்கள். அதன்பிறகு சீனிவாசன் எனது வீட்டிற்கு வந்து ரூபாய் 1 கோடியே 15 லட்சம் பணமாக கொடுத்தார். இது கணக்கில் வராத பணம் என்று இதைபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திடம், தளபதி சொல்லி வருமானவரி துறையினர் மூலம் தொந்தரவு செய்வார்கள் என்று சொன்னதோடு ரூ.15 லட்சத்தை கமிஷன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். தற்போது இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு மு.க.ஸ்டாலினின் மகள் சொந்தாமரை குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே என் வீட்டினை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன் கருப்பு பணத்தை என் வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிசோதனை செய்ய வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என் வீட்டை வீட்டு தருமாறும் எனக்கும், என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சேஷாத்திரி குமார் அந்த மனுவில் கூறியுள்ளார். 

ஏற்கனவே நில அபகரிப்பு புகாரில் தி.மு.க. முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் சிக்கி சிறையில் உள்ள நிலையில் அந்த கட்சியின் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலின் மற்றும் அவரது உதவியாளர் மற்றும் குடும்பத்தாரே அதிகார துஷ்பிரயோகம் செய்து வீட்டை அபகரித்ததாக கமிஷனரிடம் வீட்டு உரிமையாளர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்