முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் அ.தி.மு.க.வின் கோட்டை: பன்னீர் செல்வம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சங்கரன்கோவில், டிச.2 - சங்கரன்கோவில் அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என்பதை நிரூபித்துக்காட்டுவோம் என்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூளுரைத்தார்.  சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள வைஷ்ணவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சரும் நெல்லை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செந்துார் பாண்டியன் தலைமை வகித்தார். தமிழக நிதி அமைச்சரும் அ.தி.மு.க. பொருளாளருமான ஒ.பன்னீர் செல்வம், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான செங்கோட்டையன், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன், மாநில அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோஜ்பாண்டியன் எம்.பி., நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.,  வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் துரையப்பா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். செயல்வீரர்கள் கூட்ட நிகழ்ச்சிகளை சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. செயலாளரும் நகராட்சித் துணை தலைவருமான கண்ணன் தொகுத்து வழங்கினார். சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் முத்துச்செல்வி, சங்கரன்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் அன்னலட்சுமி காளிச்சாமி, குருவிகுளம் ஒன்றிய குழு தலைவர் ராமலட்சுமி பாண்டியராஜ்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மறைந்த அமைச்சரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில்,  இந்த முறைதான் அமைச்சர் கருப்பசாமி இல்லாமல் சங்கரன்கோவிலுக்கு வருகைதந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன். அவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். அ.தி.மு.க. விற்கு நெருக்கடியான காலகட்டத்தில் எம்.எல்.ஏ.க்களாக நான்கு பேர் மட்டுமே சட்ட மன்றத்தில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது தானும் கருப்பசாமியும் ஆற்றிய பணிகள் குறித்து தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த சூழ்நிலை தனக்கும் கருப்பசாமிக்கும் உண்டு என்றார். மேலும் காலம் தற்போது கருப்பசாமி நம்மிடையே இல்லாத நிலையை உருவாக்கி சங்கரன்கோவிலுக்கு இடைத்தேர்தலை உருவாக்கி விட்டது. இந்த தொகுதியில் அம்மா ஒருவரைத் தவிர வேறு யாரும் மறுமலர்ச்சியை உருவாக்கி விட முடியாது. அவர் ஒருவரால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. 50ஆயிரம் ஓட்டுகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெறும். அதற்கு நீங்கள் நிச்சயம் பாடுபடுவீர்கள் என்று எனக்கு தெரியும் என்று பேசினார். 

முன்னதாக பேசிய அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மதுரையில் ஒருவர் 40 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார். தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. தங்கள் தலைவரை போலவே ஒவ்வொரு தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும் 200 கோடி, 300 கோடி என அடித்து வைத்து விட்டு தற்போது காவல்துறையின் சோதனையில் மாட்டிக்கொண்டு முழித்துக்கொண்டுள்ளனர். தொண்டர்களுக்காக வாழக்கூடிய ஒரே தலைவர் நம் தமிழக முதல்வர் ஒருவர்தான் என்று பேசினார். 

தமிழக நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பேசும்போது, தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அதை ஏற்ற நேரத்தில் தரக்கூடிய ஒப்பற்ற ஒரே தலைவி தமிழக முதல்வர்தான். அவர் கழகமே தனது வாழ்க்கை என அர்ப்பணிப்போடு வாழ்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக அ.தி.மு.க.விற்காக உழைத்து வருகிறார். கட்சிக்காக உழைத்தவர்களை அவர் ஒரு போதும் கைவிட்டதில்லை. நாம் இப்போது இந்த நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அம்மாதான். தன்னை நம்பியவர்களை அவர் ஒரு போதும் கைவிட்டதில்லை. அதற்கு உதாரணம் சங்கரன்கோவில் சட்டமன்ற மறைந்த உறுப்பினர் கருப்பசாமி.  நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரை அதில் இரு முறை தமிழக அமைச்சராக ஆக்கி அழகு பார்த்தவர் நம் தமிழக முதல்வர். மேலும் சங்கரன்கோவில் அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் விதமாக மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். தமிழக முதல்வர் சொன்னதைத்தான் செய்வார். மாணவர்கள் பயன்பெற விலையில்லா மடிக்கணிணி, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன், கிராமப்புற மக்களின் நலனுக்காக விலையில்லா ஆடு, மாடுகள், விலையில்லா அரிசி போன்ற புரட்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருப்பவர் நம் தமிழக முதல்வர். இந்த கூட்டத்தில் உள்ளவர்களும் அனைத்து அ.தி.மு.க. தொண்டர்களும் அம்மா யாரை வேட்பாளராக அறிவிக்கிறார்களோ அவர்களுக்கு, அம்மாதான் இங்கு நிற்கிறார்கள், நாம் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பேசினார். 

விழாவில் அம்பைசட்ட மன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் நாகூர் மீரான், ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்பையாபாண்டியன், சங்கரலிங்கம், சண்முகையாபாண்டியன், நயினா முகம்மது, மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் நகர   ஜெயலலிதா பேரவை செயலாளர் அப்துல் கனி, சங்கரன்கோவில் ஒன்றிய துணை பெருந்தலைவர் நயினார், ராமநாதபுரம் ஊராட்சி செயலாளர் காளிச்சாமி, தொகுதி ஒன்றிய செயலாளர்கள் முருகையா, ராமசாமி, பரமசிவம், அ.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர்கள் சங்கை கணபதி, குணசேகரன், தீக்கனல் லட்சுமணன், மாவட்ட பொறுப்பாளர்கள் கந்தவேல், குமாரவேல், ரமேஷ், நகர நிர்வாகிகள், உமாதேவி ராமநாதன், சுந்தர், குருசாமி, ஆப்பரேட்டர் மணி, சோடா குழந்தைவேல், சங்கரன்கோவில் நகர்மன்ற உறுப்பினர்கள் முப்பிடாதி, முருகன், மாரியப்பன், உமாவதி சேகர், அந்தோணி, செளந்தர், சின்னராஜ், நிவாஸ் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழகத்தினரும் மிக அதிக அளவில் கலந்து கொண்டதால் சங்கரன்கோவில நகரமே ஸ்தம்பித்தது. மத்திய அரசை கண்டித்து அனைத்து வியாபார ஸ்தலங்களும் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியினரின் வருகையால் நகரில் கடையடைப்பு போன்ற தோற்றமே இல்லாத நிலை காணப்பட்டது. அமைச்சர்களின் இந்த வருகையால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அனைவரையும் முந்திக்கொண்டு தனது தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டது. வெற்றிக்கான முதல் படியில் அ.தி.மு.க. தனது காலை பதித்து விட்டதைப் போன்ற தோற்றத்தை இந்த செயல் வீரர்கள் கூட்டம் ஏற்படுத்தியதை காண முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்