முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கவுன்சிலர் உட்பட 300 பேர் அ.தி.மு.க. இணைந்தனர்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மார்ச்.12 - தி.மு.க. கவுன்சிலர் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் உட்பட 300 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க. வில் இணைந்தனர். மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் எஸ்.கே.பி. பாலசுப்பிரமணியன். இவர் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர். இவரது மனைவி அப்பகுதி ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார். இவர்கள் மற்றும் கள்ளிக்குடி, வில்லூர் பகுதிகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்களுடன் 300 க்கும் அதிகமானோர் தி.மு.க.வை விட்டு விலகி திருப்பரங்குன்றம் வந்தனர். அங்கு அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கத்தை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர். 

புதிதாக அ.தி.மு.க.வில் இணைந்த அவர்களுக்கு முத்துராமலிங்கம் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்போது அ.தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் முத்துக்குமார், சோழவந்தான் தொகுதி இணை செயலாளர் கல்யாண சுந்தரம், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட கவுன்சிலர் முனியாண்டி, நகர செயலாளர்கள் பன்னீர்செல்வம், பாலமுருகன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ராமசுப்பு, துணை செயலாளர் நேரு, அண்ணா தொழிற்சங்க நகர செயலாளர் முருகன், துணை செயலாளர்கள் மணிகண்டன், குமார், அம்மா பேரவை முன்னாள் மாவட்ட இணை செயலாளர் டாக்டர் பாண்டியன், கந்தசாமி, முருகன், மகாலிங்கம், கண்ணன், பிரபு சங்கர், மரக்கடை முருகேசன், பாலகுரு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

தி.மு.க.வில் தொண்டர்களுக்கு பாதுகாப்பில்லை

 

தி.மு.க.வில் குடும்ப ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தொண்டர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், அதனால்தான் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளோம் என்றும் அ.தி.மு.க.வில் புதிதாக இணைந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கள்ளிக்குடி, வில்லூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் 300 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களில் முன்னாள் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சங்கரேஸ்வரி ஆகியோர் கூறும் போது, 

நாங்கள் 35 ஆண்டு காலமாக தி.மு.க.வில் இருந்தோம். கட்சியில் எங்களுக்கு மரியாதை இல்லை. கருணாநிதிக்கு தனது குடும்பத்தினரை பார்க்கவே நேரம் இல்லை. எங்களைப் போன்ற தொண்டர்களை எப்படிப் பார்ப்பார். தி.மு.க. குடும்ப கட்சியாகி விட்டது. குடும்ப ஆட்சி நடக்கிறது. அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் சண்டையை தீர்த்து வைக்கவே நேரம் இல்லை. இதில் தமிழக மக்கள் நலனில் எப்படி அவர் அக்கறை எடுக்க முடியும். உண்மையான தொண்டர்களுக்கு தி.மு.க.வில் பாதுகாப்பில்லை. தமிழக மக்களுக்கு நற்பலன்கள் இல்லை. மக்கள் நலனில் அக்கறை உள்ள அ.தி.மு.க.வில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அப்பகுதியில் உள்ள விசுவாசமான தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க மகிழ்ச்சியுடன் அ.தி.மு.க.வில் இணைவதை பெருமையாக கருதுகிறோம். தற்போது முதல் கட்டமாக 300 பேர் இணைந்துள்ளோம். தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அடுக்கடுக்காக அ.தி.மு.க.வில் விரைவில் இணைய உள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்