முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம்களுக்கு விரைவில் உள் ஒதுக்கீடு: சல்மான் குர்ஷித்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.2 - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் பின்தங்கிய முஸ்லிம்களுக்கு விரைவில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவருகிறது என்றும், இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்றும் குர்ஷித் கூறினார். இந்த உள் ஒதுக்கீடு எவ்வளவு என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் எப்போது என்பது குறித்து அவர் கால வரையறை எதையும் தெரிவிக்கவில்லை. 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் கணிசமான அளவுக்கு முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். அந்த முஸ்லிம்களின் ஓட்டுவங்கியை குறிவைத்து அரசு இந்த உள் ஒதுக்கீட்டை தீர்மானிக்கலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் இரண்டரை ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். மேலும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றவும் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் சல்மான் குர்ஷித் கூறினார். முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான திட்டம் அரசின் கையில் உள்ளது. இது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்