முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்ற தீபத் தூணிற்கு போலீசார் பாதுகாப்பு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், டிச.2 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7 ம் தேதி மாலையில் கோயிலுக்குள் உள்ள ஆறுகால் பீடம் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். வருகிற 8 ம் தேதி காலையில் தேரோட்டமும், மாலை 6 மணிக்கு கோயிலுக்குள் பாலதீபமும், மலைமேல் கார்த்திகை மகாதீபமும் ஏற்றப்படும். 

திருவிழா நடைபெறும் நாட்களில் தங்கச்சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரம், தங்க மயில், வெள்ளி ஆட்டுக்கிடாய், அன்னம், சேஷம் உட்பட பல்வேறு வாகனங்களில் தினம் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கார்த்திகை மகா தீபம் வருகிற 8 ம் தேதி மாலையில் மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையார் மண்டபத்தின் அருகே மோட்ச தீப மண்டபத்தின் மேல் பகுதியில் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அங்குதான் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. 

அங்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றக் கூடாது என்றும் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்தான் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டுமென இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதற்காக மலை மீது உள்ள தீபத் தூணிற்கு எஸ்.ஐ. ராஜசேகர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 8 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுழற்சி முறையில் எப்போதும் 5 பேர் தூணிற்கு பாதுகாப்பளித்து வருகின்றனர். வழக்கமாக, தீபம் ஏற்றுவதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்களுக்கு முன்பாகவே துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்