முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா - பெகுரா - சந்தோலியா குற்றவாளிகள்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.2 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேட்டில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோர்தான் முக்கிய குற்றவாளிகள் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது. இதனால் இநத வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட மற்ற 10 பேரைப் போல் இவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சி.பி.ஐ. கூறியுள்ளது. 

இந்த வழக்கில் ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானி, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சந்தோலியா மற்றும் சித்தார்த்த பெகுரா உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கனிமொழி, சரத்குமார் உட்பட 11 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ராசா, சந்தோலியா, சித்தார்த்த பெகுரா ஆகியோர் மட்டும் இன்னும் சிறையில் உள்ளனர். இவர்களில் ராசா ஜாமீன் மனுவே தாக்கல் செய்யவில்லை. 

சித்தார்த்த பெகுரா, கனிமொழியுடன் சேர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 28 ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது பெகுராவுக்கு மட்டும் ஜாமீன் தர டெல்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. இந்நிலையில் சந்தோலியா, டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லலித் வாதாடுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆ. ராசா, சித்தார்த்த பெகுரா மற்றும் சந்தோலியா ஆகியோர்தான் பிரதான எதிரிகள். மிகப் பெரிய முறைகேடு நடப்பதற்கு திட்டமிட்டதில் இவர்கள் 3 பேருக்கும்தான் முக்கிய பங்கு உண்டு. எனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடன் இவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் மாறுபட்டது. எனவே ஜாமீனில் விடுதலையானவர்களுடன் இவர்களை ஒப்பிடவே முடியாது. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான தேதியை சந்தோலியாதான் மாற்றியுள்ளார். இதனால் தனியார் நிறுவனங்கள் பயனடைந்தன என்றார். 

சந்தோலியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில், இந்த வழக்கில் இரு வேறு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சந்தோலியா அரசு ஊழியர் என்பதால் அவருக்கு ஜாமீன் மறுப்பது சரியானதல்ல. இந்த வழக்கில் ஆதாயம் அடைந்தவர்கள் ஜாமீன் பெற்று வெளியே இருக்கும் போது கடந்த 10 மாதங்களாக சந்தோலியா சிறையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே சி.பி.ஐ. பாரபட்சம் காட்டுவது ஏன்? அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கே ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தோலியா மட்டும் சிறையில் இருக்கிறார் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்