முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முதல்வருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச. 2 - முல்லைப் பெரியார் அணையில் 142 அடி தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றுங்கள் என் று கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து இருக்கிறார். கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு முல்லைப் பெரியார் அணை பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அனுப் பியுள்ள கடிதத்தின் விபரம் வருமாறு - 

நேற்று தாங்கள் அனுப்பிய பேக்ஸ் எனக்கு கிடைத்தது. இத்தருணத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கேரள அரசுக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் ஒருங்கிணைப்பு உள்ளது. பரஸ்

பர நல்லெண்ணம் உள்ளது. முல்லைப் பெரியார் அணை பிரச்சினை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரு மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர புரிந்து கொள்ளும் உணர்வை இந்தப் பிரச்சினையிலும் கடை பிடிக்க வேண்டும். 

முல்லைப் பெரியார் அணை குறித்து கேரள மக்களிடம் பீதி கிளப்பப் பட்டு வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் இரு மாநில மக்களிடமும் பதட்டம் ஏற்பட்டு வருகிறது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். தவிர, மத்திய நீர்வளக் குழுவின் பரிந்துரையின் பேரில் முல்லைப் பெரியார் அணையில் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 

உச்சிநீதிமன்றத்தில் முல்லைப் பெரியார் அணை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினை தொடர்பாக பிறப்பித்த உத்தரவை கடைபிடிக்காமல் ,கேரள அரசு, கடந்த 2003 மற்றும் 2006 ம்ஆண்டுகளில் கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. 

முல்லைப் பெரியார் அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் தலைவராக இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.ஏஸ். ஆனந்த் நியமிக்கப்பட்டார். மத்திய நீர்வளக் கமிஷனின்  பரிந்துரையின் பேரில் தமிழக அரசு கடந்த 1980 -ம் ஆண்டு முதல் 1994 -ம் ஆண்டு வரை முல்லைப் பெரியார் அணையை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த அணை தற்போது புதிய அணை  போல காட்சி தருகிறது. 

முல்லைப் பெரியார் அணையில் 142 அடிக்கு தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் என்று தீவிர பரிசீலனைக்குப் பிறகு கடந்த 2006 -ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 4 மாதங்களில் முல்லைப் பெரியார் அணைப் பகுதியில் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தாங்கள் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளீர்கள். ஆனால் இந்திய புவியில் துறையின் அறிக்கையின் படி கடந்த 4 மாங்களில் அங்கு 4 முறை லேசான நிலநடுக்கம் தான் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. முல்லைப் பெரியார் அணை நல்ல பாதுகாப்பான நிலையில் தான் உள்ளது என்று மத்திய தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அங்கு மத்திய தரமான அளவு  நிலநடுக்கம் கூட ஏற்பட வாய்ப்பில்லை. 

முல்லைப் பெரியார் அணை பலப்படுத்தப்பட்டு விட்டதால், அங்கு அதிக நீர் தேக்கத்தால் அணை உடையவோ அல்லது வெள்ள அபாயம் ஏற்படவோ வாய்ப்பில்லை. 

எனவே உச்சநீதிமன்றத்தின் ஆணையை அமல் படுத்துங்கள். முல்லைப் பெரியார் அணையில் 142 அடி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுங்கள் என்று இந்தக் கடிதம் மூலமாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்