முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நர்சு பன்வாரிதேவி காணாமல் போன வழக்கு: ராஜஸ்தான் மாஜி மந்திரி கைது

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச.- 5 - நர்சு பன்வாரிதேவி காணாமல் போன விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் மஹிபால் மதர்னா நேற்று ஜோத்பூரில் கைது செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மதர்னா, பின்னர் சி.பி.ஐ.யால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவரிடம் துருவித் துருவி விசாரணை நடைபெற்றது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரி தருனிமிஸ்ரா கூறுகையில், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் மஹிபால் மதர்னாவையும், பரசுராம் பிஷ்னோயும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். லுனி சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவின் சகோதரர்தான் இந்த பிஷ்னோய். பின்னர் சர்க்யூட் ஹவுசில் வைத்து இவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முன்னதாக ஜோத்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. சகாபுதீன், பலியா, ஷோகன்லால் ஆகிய மூவருக்கு எதிராக இ.பி.கோ. 364 வது பிரிவு(கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்துதல்) இ.பி.கோ. 120(பி)(கிரிமினல் சதி திட்டம்) மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு எதிரான அராஜக தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் பன்வாரிதேவியை தீர்த்துக்கட்டும் நோக்கத்துடன் அவரை கடத்த சதி திட்டம் தீட்டியதாக குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நர்சு பன்வாரிதேவிக்கு வயது 36. இவர் கடந்த செப்டம்பர் 1 ம் தேதி முதல் காணாமல் போனார். இவரிடம் ராஜஸ்தான் மாஜி அமைச்சர் மதர்னாவும், இவரும் படுக்கை அறையில் இருந்தது போல சித்தரிக்கும் ஒரு சி.டி இருந்ததாம். இந்த சி.டியை வைத்து மதர்னாவை, நர்சு பன்வாரிதேவி பிளாக்மெயில் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகே அவர் காணாமல் போயிருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லட், மதர்னாவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். நர்சு காணாமல் போனதில் மதர்னாவுக்கு பங்கு இருக்கும் என்ற சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நர்சின் கணவர் அமர்சந்த், தன் மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தேடி கண்டுபிடிக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மதர்னாவின் தூண்டுதலின் பேரில் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கணவர் அமர்சந்த் புகார் செய்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மாஜி மந்திரி மதர்னா மறுத்துள்ளார். இந்த நிலையில்தான் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி உட்பட பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாஜி மந்திரி கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்