முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் போர்நிறுத்த மீறல் இந்திய முகாம்கள் மீது தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,டிச.- 6 - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீண்டும் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ முகாம்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்திய ராணுவத்தினர்களும் திருப்பிச்சுட்டனர். இந்திய எல்லைப்பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த மீறலில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதுவும் மழை மற்றும் குளிர்காலம் வந்துவிட்டால் இந்திய ராணுவத்தினர்களை திசை திருப்பி தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி போர்நிறுத்த மீறலில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளனர். குப்வாரா மாவட்டத்தில் உள்ள குந்துவா பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் பாதுகாப்புக்காக இந்திய ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு இந்திய ராணுவத்தினர்களும் பதிலடி கொடுத்தனர். இதை தாங்காமல் பாகிஸ்தான் ராணுவத்தினர் தப்பியோடிவிட்டனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டதற்கு இந்தியா சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இருக்கும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீவிரவாதிகள் சேர்ந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்