Idhayam Matrimony

ஆநதிர சட்டசபையில் முதல்வருடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மோதல்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், டிச.- 6 - ஆந்திர சட்டசபையில் நேற்று முதல்வர் கிரண் குமார் ரெட்டியுடன்  எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். இதை அடுத்து இந்த ஒரு வரி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று சட்டசபையில் விவாதம் நடத்தது.  இந்த விவாதத்தை துவக்கி வைத்து  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்  தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு பேசினார்.அப்போது அவர் ஆந்திர அரசை கடுமையாக கிண்டலடித்தும்  தாக்கியும் பேசினார். இந்த அரசு பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரிய நகைச்சுவை அரசாக வர்ணிக்கப்படுகிறது என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.அனைத்து அம்சங்களிலும் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்விகளை கண்டுள்ளது என்று நாயுடு கடுமையாக சாடினார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம்  முதல் அமைச்சருக்கு எதிராக மட்டும் கொண்டு வரப்படவில்லை. அனைத்து  அமைச்சர்களுக்கு எதிராகவும்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் நாயுடு கூறினார். ஆட்சியை நடத்துவதற்கு  எங்களது நம்பிக்கையை இந்த அரசு இழந்து விட்டது என்று  நாயுடு குறிப்பிட்டார்.
அப்போது ஆவேசமாக எழுந்த முதல்வர் கிரண் குமார் ரெட்டி நாயுடுவின் நம்பிக்கை எங்ளுக்கு  தேவையில்லை. மக்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் என்றார்.  அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்பேசிய நாயுடு ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை குறிப்பிட்டு  சில குற்றச்சாட்டுகளை கூறினார். உங்களது ஆட்சியின் லட்சணங்களை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று நாயுடு கூறினார். நீங்கள் ( ரெட்டி ) நியமனம் செய்யப்பட்ட முதல்வர். சோனியாவின் கால்களில் விழுந்து நீங்கள் இந்த பதவியை பெற்று இருக்கிறீர்கள். சீலிடப்பட்ட உறையில் இருக்கும் முதல்வர் நீங்கள் என்று நாயுடு குற்றம்சாட்டினார்.
அப்போது ஆவேசம் அடைந்த கிரண் குமார் ரெட்டி,  எனது குடும்பம் 1962 ம் ஆண்டு முதற்கொண்டே  காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறது. எனக்கு சோனியாவின் கருணையும்  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அப்படி அல்ல. 1995 ம் ஆண்டு உங்களது சொந்த மாமனாரையே நீங்கள் முதுகில் குத்தி  விட்டு  முதல்வர் ஆனவர் என்று  காட்டமாக சாடினார்.
இதற்கு பதிலடி கொடுத்த நாயுடு  நான் எனது கட்சிக்கு தலைவர். ஆனால் நீங்கள்  சோனியாவின் கருணையால் உருவான தலைவர் என்றார்.
போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நீங்கள் பொது மக்களிடம் போக முடியாது. உங்களது அரசு ஒரு பெரிய ஜோக் அரசு என்று மக்களால் பேசப்படுகிறது என்று நாயுடு கூறினார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து  சேர்த்ததாக உங்கள் மீது வழக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நீங்கள் ஊழலை பற்றி பேச உரிமையில்லை என்று ரெட்டி வாதிட்டார்.
கடந்த 2004 ம் ஆண்டு முதல்  இந்த  காங்கிரஸ் ஆட்சியில்  நடந்த ஊழல் விவகாரங்களை நாயுடு பட்டியலிட்டு பேசினார்.
ஆந்திர உள்துறை அமைச்சர்  சபீதா இந்திரா ரெட்டி மீதும் சில குற்றச்சாட்டுக்களை நாயுடு  கூறினார்.
அதற்கு பதில் அளித்த சபீதா இந்திரா என் மீதும் என் குடும்பத்தார் மீதும் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை நீங்கள் அரசிடம் கொடுங்கள் . அதன் மீது  விசாரணை நடத்த உத்தரவிடப்படும்.  இப்போது குற்றச்சாட்டு உங்கள் மீதான் இருக்கிறது  அதற்கு நீங்கள் பதில் கொடுங்கள்  உண்மையை நிரூபியுங்கள் அதை விட்டு  அபாண்டமாக குற்றம் சுமத்தாதீர்கள்  என்று சபீதா இந்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாயுடுவுக்கும் சபீதா இந்திராவுக்கும் இடையே நடந்த இந்த வார்த்தை  போருக்கு பிறகு  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் , சந்திரபாபு நாயுடு  மீது  பாய்ந்தனர்.
தங்களது கட்சியை பற்றி பொய்க்குற்றச்சாட்டு கூறிய நாயுடுவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 இதனால் சபையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்