முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீடு கிடப்பில் போடப்பட்டது- மத்தியஅரசு பணிந்தது

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.- 8 - சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதற்கு எதிர்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது. ஒருமித்த கருத்து ஏற்படும் வரை இந்த திட்டத்தை கிடப்பில் போடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டத்தால் உள்நாட்டு சில்லறை வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் பல கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும்  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று பாரதீய ஜனதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு  எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் லோக் சபை, ராஜ்ய  சபை ஆகிய இரு சபைகளுமே எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் முடங்கின. இந்த கட்சிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மேலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன.  இதனால் மிகவும் ஆடிப்போன மத்திய அரசு இந்த  முடிவை நிறுத்தி வைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.  இந்த நிலையில் நான்கு நாள் விடுமுறைக்கு பிறகு பாராளுமன்றம் நேற்று  வழக்கம்போல் கூடியது. டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு பிறகு  பாராளுமன்றத்தின் லோக் சபையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படும் வரையில் அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசிக்கும் வரையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசு கிடப்பில் போடுவதாக அவர் தெரிவித்தார்.

இதே போல ராஜ்ய சபையிலும் இதேபோன்ற ஒரு அறிக்கையை மத்திய வர்த்தக துறை அமைச்சர்  ஆனந்த் சர்மா வெளியிட்டார். அரசியல் கட்சிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஈடுபாடு இல்லாமல் இந்த முடிவை செயல்படுத்த முடியாது என்பதால் அவர்களுடன் ஆலோசனை நடத்தி  அதன் பிறகு  ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதுவரை இந்த முடிவை அரசு நிறுத்தி வைப்பதாகவும் பிரணாப் முகர்ஜி விளக்கினார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசு நிறுத்தி வைத்துள்ளதாக பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிவிப்புக்கு லோக் சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் வரவேற்று பேசினார்.

மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு  தலைவணங்கி விட்டது. மக்களின் மன உறுதிக்கு முன்பாக அரசு தலை வணங்குவது தோல்வியாகாது என்று  சுஷ்மா சுவராஜ் கூறினார்.

 மத்திய நிதி அமைச்சரும் லோக் சபையின் அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜியின் அறிவிப்புக்கு பிறகு  சபாநாயகர் மீராகுமார்,  பல்வேறு எதிர்க்கட்சிகள்  இந்த விஷயம் தொடர்பாக கொடுத்திருந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களையும் நிராகரித்தார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  இது குறித்து விவாதிக்க   வேண்டும் என்றும் கோரி பா.ஜ.க. பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டு வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

என்றாலும் கூட பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பால் திருப்தி அடையாத பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள்  லோக் சபையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.

அதன் பிறகு  லோக் சபையில் வழக்கமான கேள்வி நேரம் தொடங்கியது. கடந்த மாதம் 22-ம் தேதி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதற்கொண்டே இரு சபைகளிலும் எந்த விதமான அலுவல்களும் நடக்கவில்லை. அதன் பிறகு இப்போதுதான்  இந்த குளிர்கால கூட்டத்தொடரில் முதன் முறையாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த 9 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் சபை நடவடிக்கைகள் வழக்கம் போல் சுமூகமாக நடந்தன.

எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்து சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை கிடப்பில் போட  அரசு முன் வந்தது எதிர்க்கட்சிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்