முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நர்சு காணாமல் போன விவகாரம்:கணவர் அமர்சந்துக்கு 5 நாள் சி.பி.ஐ. காவல்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஜோத்பூர், டிச. - 10 - ராஜஸ்தான் மாநிலத்தில் நர்சு பன்வாரிதேவி காணாமல் போன விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவரது கணவரே கைது செய்யப்பட்டு 5 நாள் சி.பி.ஐ. காவலில் நீதிமன்றத்தால் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரி தேவி என்ற 36 வயது நர்சு, கடந்த செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் காணாமல் போனார். இது தொடர்பாக அவரது கணவர் அமர்சந்த், உள்ளூர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்ததை அடுத்து இம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் மஹிபால் மதர்னா, இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் பன்வாரி தேவியின் கணவர் அமர்சந்த், ராஜஸ்தான் ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  இதையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பானமுன்னேற்றங்களை தவறாது அளிக்குமாறு ஜோத்பூர் போலீசுக்கும், பின்னர் சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. நர்சு காணாமல் போன விவகாரத்தில் அமைச்சர் மஹிபால் மதர்னா சிக்கியதால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து மஹிபால் மதர்னா, பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு தலைமறைவாக இருந்த அவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர். அவருடன் சேர்த்து பரசுராம் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களது காவலை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது.  இந்நிலையில் காணாமல் போன நர்சின் கணவர் மீதே சி.பி.ஐக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவர் அமர்சந்தின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததாலும், அவர் மத்திய புலனாய்வு துறையுடன் ஒத்துழைக்காத காரணத்தாலும் அவரையே சி.பி.ஐ. போலீசார் கடந்த வியாழக்கிழமையன்று ஜோத்பூரில் கைது செய்தனர். கைதான அமர்சந்தை 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட் உத்தரவிட்டது.
சி.பி.ஐ. காவலில் அமர்சந்த் சிக்கியிருப்பதால் இந்த விவகாரத்தில் பல திருப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைதான முன்னாள் அமைச்சர் மஹிபால் மதர்னாவும் காணாமல் போன நர்சுவும் படுக்கை அறையில் இருந்தது போன்ற சி.டி. ஒன்று அந்த நர்சிடம் இருந்ததாம். அதை வைத்து அவர் பிளாக்மெயில் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகே அவர் காணாமல் போயிருக்கிறார். இதையடுத்தே மாஜி அமைச்சரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். தற்போது அவரது காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட மந்திரியான மஹிபால் மதர்னாவுக்கு வயது 59. இவர் ஓசியன் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர். கைதான மற்றொரு நபரான பரசுராம் விஷ்னோய் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் சகோதரர் ஆவார். இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில்தான் காணாமல் போன நர்சின் கணவரே தற்போது கைது செய்யப்பட்டு அவரும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விரைவில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்