முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் சிதம்பரத்தை களங்கப்படுத்த பா.ஜ.க. முயற்சி-கபில்சிபல்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 11 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் ஆனால் அவரை களங்கப்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி முயல்வதாகவும் மத்திய அமைச்சர் கபில்சிபல் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு உள்ளது எனவே அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சாமி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்றம், சுப்பிரமணியசாமியே சாட்சிகளை விசாரிக்கவும், இந்த வழக்கில் வாக்குமூலம் அளிக்கவும் அனுமதி  அளித்தது. அதன் பிறகு இதுபற்றி 17 ம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதி அறிவித்திருந்தார். இவ்வாறு சுப்பிரமணிய சாமிக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்தது. ப.சிதம்பரம் பதவி விலகக் கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில் மத்திய அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் சிதம்பரத்திற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை வலிமையாக தெரிவித்தார். 2 ஜி.ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை குற்றவாளியாக்க பா.ஜ.க. தலைமையில் ஆன தேசிய ஜனநாயக கூட்டணி முயல்வதாகவும், பாராளுமன்ற ஜனநாயகத்தை கெடுக்க வேண்டுமென்றே தே.ஜ. கூட்டணி முயல்வதாகவும் கபில்சிபல் குற்றம் சாட்டினார். சிதம்பரத்திற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அரசு நிராகரிப்பதாகவும் அவர் கூறினார். தேசி ய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில சக்திகள் சிதம்பரத்தை களங்கப்படுத்த முயல்வதாகவும் கபில்சிபல் சாடினார். 2008 ம் ஆண்டு ஜனவரி 10 ம் தேதிதொலைத் தொடர்பு ஆப்பரேட்டர்களுக்கு விருப்பக் கடிதங்கள் வழங்குவதற்கு முன்பாக ப.சிதம்பரத்துடன் அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் ராசா எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் கபில்சிபல் விளக்கினார். மேலும் விருப்பக்கடிதங்கள் வழங்கப்படுவது பற்றி நிதி அமைச்சகத்திற்கு தெரியவே தெரியாது. இது ஆவணங்களை பார்த்தாலே தெரியும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார். எனவே விருப்பக்கடிதங்கள் வழங்கப்பட்ட விசயத்தில் அன்றைய நிதி அமைச்சர்(ப.சிதம்பரம்) எந்த வகையிலும் பொறுப்பாளி அல்ல என்றும் கபில்சிபல் விளக்கமளித்தார்.எனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் உள்பட அந்த நிதி அமைச்சகத்தில் எந்த அதிகாரியும் எந்த தவறும் செய்யவில்லை, முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் கபில்சிபல் அடித்துக் கூறினார். தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள சிலர் சிதம்பரத்தை எப்படியாவது களங்கப்படுத்த வேண்டும் என்று முயல்கிறார்கள். ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களை மறுக்கிறோம். அவர் ஒரு மதிப்புமிக்க நபர். எந்த விருப்பும் வெறுப்பும் இன்றி மேலும் அச்சமும் இன்றி ப.சிதம்பரம் தன்னுடைய கடமைகளை ஆற்றி வருகிறார் என்றும் கபில்சிபல் புகழாரம் சூட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்