முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு பிரச்சனையை தீர்க்க மத்தியஅரசு எல்லா உதவியும் செய்யும்

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கன்னூர், டிச.- 11 - முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை தற்போது விசுவரூபம் எடுத்துள்ளது. அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டியே தீருவோம் என்கிறார்கள் கேரள தலைவர்கள். ஆனால் அணை வலுவாக உள்ளது. அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தன்னுடைய வாதத்தை வலுவாக முன்வைத்து வருகிறது தமிழகம். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்னவோ இருதரப்பு மக்களும்தான். அந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் விலைவாசி உயர்வால் தவிக்கிறார்கள். தக்காளி, முட்டை, அரிசி, காய்கறி போன்றவற்றின் விலைகள் கேரளாவில் உயர்ந்துவிட்டன. இந்தப் பக்கத்தில் அதாவது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு ஒரே ஒரு பாதிப்புதான். ஐயப்பனை அவர்களால் நிம்மதியாக தரிசிக்க முடியவில்லை. காரணம், ஐயப்ப சுவாமி குடியிருப்பது கேரளாவில். இது ஒன்றுதான் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு. ஆனால் இந்த பிரச்சனையை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் கேரள தலைவர்கள். இந்தநிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கன்னூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை வந்தால், அதைத் தீர்ப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டால் மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும். அதற்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. இந்திய சமஷ்டி முறையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே மாநில பிரச்சனைகளை தீர்க்க உத்தரவிட முடியும். இருந்தாலும் மத்திய அரசு இந்த பிரச்சனையை தீர்க்க எல்லா வழிகளிலும் உதவி செய்யும். பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு முதலில் அழைப்பு விடுத்தது. ஆனால் தமிழகம் அதற்கு தமிழகம் செவிசாய்க்கவில்லை. இருந்தாலும் பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைப்பு விடுப்பார். பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்வரை மத்திய அரசு தனது முயற்சிகளை தொடரும். இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பமாகும். எனவே சுமூக உறவை கடைப்பிடிக்குமாறு நான் இருதரப்பு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இரு மாநில மக்களும் இந்த விஷயத்தில் ரத்தம் சிந்திவிடக்கூடாது. அதற்கு இரு மாநில அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும்.
இவ்வாறு ஏ.கே.அந்தோணி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்