முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி: பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ,மார்ச்.- 13 - ஜப்பான் நாட்டின் வடகிழக்கு கடலோர பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை அடுத்து நிகழ்ந்த கொடூர சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன சுருக்கமாக சொன்னால் இந்த முறை ஜப்பான் நாட்டை சுனாமி புரட்டிப் போட்டு விட்டது அல்லது தாண்டவமாடி விட்டது என்றே சொல்லலாம். இதுவரை 217 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள 2 அணு உலைகளில் குளுகுளு முறைகள் செயலிழந்த காரணத்தால் அங்கு அவசர நிலையை பிறப்பிக்க வேண்டிய சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இந்த அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு கசியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் இந்த அணு உலைகள் அமைந்துள்ள 10 கி.மீ. தூரத்திற்குள் வாழும் 45 ஆயிரம் பேரை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு ஜப்பான் நாட்டு பிரதமர் நவோட்டாகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தால் வரலாறு காணாத பேரழிவு அங்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாயின. ராட்சத அலைகள் கடலில் எழுந்து தாக்கியதால் நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் வீடுகள் கூட சுனாமி பேரலையில் அடித்து செல்லப்பட்டன. பொதுமக்களும் அடித்து செல்லப்பட்டார்கள். கடலில் சென்று கொண்டிருந்த கப்பல்களும் சுனாமி பேரலையில் சிக்கி கவிழ்ந்தன. சாலைகளில் மிகப் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளானார்கள். இது ஒரு வரலாறு காணாத பேரழிவு மட்டுமல்ல, சீரழிவும் கூட என்று உலக மக்கள் கருதுகிறார்கள். நல்லவேளையாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால் உயிரிழப்பு இத்தோடு நின்றது. இல்லாவிட்டால் பல ஆயிரம் பேர் பலியாகி இருப்பார்கள். இந்த சுனாமி எச்சரிக்கை பல நாடுகளில் விடுக்கப்பட்டது. இருந்தாலும் இந்தியாவுக்கு இதனால் ஆபத்தில்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் உலக மக்களையே அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. ஜப்பான் மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று பலர் பேசுவதை காதால் கேட்க முடிந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்