முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தாக்குதல் தினம்: தலைவர்கள் அஞ்சலி

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.14 - பாராமன்ற தாக்குதல் சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி டெல்லி பாராளுமன்ற வளாகத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் மாறுவேடத்தில் நுழைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினார்கள்.  பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற இவர்களை பாதுகாப்பு படைவீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவத்தின்போது தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டதில் பாதுகாப்புபடை வீரர்கள் 8 பேர் வீரமரணம் அடைந்தனர். தோட்டப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரும் உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தின் 10 -வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் மேற்கண்ட 9 பேரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், மக்களவை சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி,  மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி, பா.ஜ.க. மூத்ததலைவர் எல்.கே. அத்வானி மற்றும் ஏராளமானோர் பங்கேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு கைது செய்யப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவுக்கு கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 18 -ம் தேதி டெல்லி கோர்ட்டு தூக்குதண்டனை விதித்தது.  அப்சல்குரு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.  இருப்பினும் அப்சல்குருவுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு வழங்கப்பட்ட வீர பதக்கங்களையும் அவர்கள் கடந்த 2006 -ம் ஆண்டு அரசிடம் திருப்பி வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நேற்று நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பலியான 8 வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்