முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யா பயணமானார்

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச.16 - 12 வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று ரஷ்யா புறப்பட்டு சென்றார். இந்த சுற்றுப் பயணத்தின் போது இரு நாடுகளிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் இன்று துவங்கவுள்ள 12 வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன்சிங் நேற்று மாஸ்கோ புறப்பட்டு சென்றார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலர் புலோக சாட்டர்ஜி, தொழிலதிபர்கள் உட்பட பலர் ரஷ்யா சென்றுள்ளனர். இந்த 2 நாள் சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் மன்மோகன்சிங் இன்று 16 ம் தேதி ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவை சந்தித்து பேசுவார். மேலும் ரஷ்ய ஜனாதிபதி அளிக்கும் விருந்திலும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். பிரதமருடன் செல்லும் உயர் மட்ட குழுவினரும், தொழிலதிபர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையேயான அணுசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இது குறித்து வெளியுறவு துறை செயலாளர் ராஞ்சன் மத்தய் கூறியதாவது, 

இரு நாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய, இந்திய தலைவர்கள் தனித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதன் பிறகு இரு நாட்டு நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் கலந்து கொள்ளும் சந்திப்பும் நடைபெறவுள்ளது. ரஷ்ய பிரதமர் புடினை இந்திய பிரதமர் சந்தித்து பேசவுள்ளார். 

உள்துறை, பாதுகாப்பு, வர்த்தகம், மருத்துவம், சுற்றுலா, ஸ்டீல் உள்ளிட்ட துறைகள் குறித்து இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும் இரு நாடுகளிடையே சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளது. அணு ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ரஷ்யாவுடன் இந்தியா நெருங்கிய உறவை கொண்டுள்ளது. ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் கூடங்குளத்தில் முதல் 2 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 3 மற்றும் 4 வது உலைகளை அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம். கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான புதிய ஒப்பந்தப்படி அரியானாவில் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony