முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன்லோக்பால் மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, டிச.- 19 - ஜன்லோக்பால் மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள் என்று அன்னா ஹசாரே வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் நேற்று (டிச.18) இரவு பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்னா ஹசாரே கூறியதாவது:- கேள்வி: மத்திய அரசு லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளதா? பதில்: நம்பிக்கை இல்லை. மத்திய அரசு 4 தடவை எங்களை ஏமாற்றி உள்ளது. அதனால்  நம்பிக்கை இல்லை. மசோதாவை நிறைவேற்றாவிட்டால் டிச.27-ந் தேதி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெறும். மசோதாவை நிறைவேற்றினால் அதே டிச.27-ந் தேதி பிரதமரை வரவழைத்து பாராட்டி ரோஜா மலரை கொடுப்பேன். கடந்த 16 ஆகஸ்ட் அன்று கோடிக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தது மத்திய அரசின் காதில் விழவில்லையா? செவிடா? குருடா? பிரதமர் நல்லவர். அது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் வேறு ஒரு சிலர் கையில் உள்ளது. கேள்வி: யார் கையில் உள்ளது? பதில்: பலர் கையில் உள்ளது. சில மத்திய அமைச்சர்கள் தங்களை பிரதமர் என்று நினைத்து கொள்கின்றனர். கேள்வி: சி.பி.ஐ. யை லோக்பால் மசோதாவுக்கு கொண்டு வருவதில் எதாவது சமரசம் செய்து கொள்வீர்களா? பதில்: எந்த சமரசமும் கிடையாது. இந்த நாட்டிலுள்ள மிகப்பெரிய காவல்துறை அதிகாரிகள் சி.பி.ஐ.யில் உள்ளனர். சி.பி.ஐ. அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சி.பி.ஐ. எத்தனையோ வழக்குகளை விசாரித்து கொண்டிருக்கிறது. ஆனால் எந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளோ சிறைக்கு சென்றதாக கூற முடியுமா? சி.பி.ஐ. முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல வழக்குகள் செயல்படாமல் முடக்கி வைத்துள்ளனர். சி.பி.ஐ.யில் லஞ்ச ஒழிப்பு பிரிவு இல்லாத லோக்பால் மசோதா தேவையில்லை.   கேள்வி: ஒருங்கிணைப்பு குழுவில் தென்னிந்தியர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறதே? 

பதில்: ஒருங்கிணைப்பு குழுவில் தமிழகத்தை சேர்ந்த சந்துரு இருக்கிறார். விரைவில் கமிட்டியை உருவாக்க உள்ளோம். அதில் பெண்கள், தலித்துகள், மலைவாழ் மக்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். 

உறுப்பினர்களில் ஏழை, பணக்காரர்கள் என்ற பேதம் இல்லை. உறுப்பினர்களாக வருபவர்கள் ஒழுக்கம் நிறைந்த நடைமுறை உள்ளவர்கள், குற்றச் செயலில் ஈடுபடாதவர்கள் மட்டுமே ஒருங்கிணைப்பு குழுவுக்கு தேர்வு செய்வோம். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தென் மாநிலங்களை சேர்ந்தவர்களை தேர்வு செய்வார். ஜனவரி 1-க்கு பிறகு நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் லோக்பால் மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்களின் வீடுகளை ஆயிரக்கணக்கான மக்கள் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். ஆனால் பொதுசொத்துக்களை சேதப்படுத்தாமல் அஹிம்சை வழியில் போராட வேண்டும். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்