முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா நடப்பு பார்லி. கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் - பிரதமர்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச. - 19 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நடப்பு பாராளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடரில்  நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி திரும்பினார். அவர் டெல்லி திரும்புகையில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். இந்த மசோதா நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன என்றும் இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். லோக்பால் மசோதா ஏற்கனவே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் திருத்தப்பட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது  இந்த மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் பிரதமர் உள்ளிட்ட முக்கிய உயர் பதவிகளில் உள்ளவர்களையும் சேர்க்க வேண்டும் என்று பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வரும் நிலையில் இந்த புதிய மசோதாவில் என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது நாளை புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் தெரியவரும். இந்த கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற போதுமான கால அவகாசம் கிடைக்காவிட்டால் இந்த குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. ஆனால் இந்த மசோதாவை நிறைவேற்ற தவறினால் தான் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அன்னா ஹசாரே ஏற்கனவே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்கள் அனைவரும்  மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த மசோதா  நிறைவேற்றப்படுமா  அல்லது அதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா? என்பது  இந்த வாரத்தின் இறுதியில் தெரிய வரும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்