முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யைச் சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 22 - பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் திடமான ஒத்துழைப்பை தரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறந்த நிர்வாகிக்கான கே.கருணாகரன் விருதை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கி பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது, பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்கு மத்திய அரசு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும்கூட பாராளுமன்றம் சுமூகமாக நடக்காதது கவலை அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தராதது துரதிருஷ்டவசமானது. பாராளுமன்றத்தை அமளியில்லாமல் நடத்துவதற்கு ஆளும் கட்சி மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சிகளும் திடமான ஒத்துழைப்பை தரவேண்டியது மிகவும் அவசியம். பாராளுமன்றத்திற்கு அடித்தளமிட்ட நமது முன்னோர்கள் எதை எதிர்பார்த்தார்களோ அதை நிறைவேற்றும் வகையில் பாராளுமன்றத்தை நடத்துவதற்கு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளால் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்து வருகின்றன. இதை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இன்றைய அரசியல் தலைவர்களில் பொதுச் சேவையில் நீண்டகாலமும், சிறப்பாகவும் செயல்படுபவர்களில் ஒருசிலரே இருக்கின்றனர். அவர்களில் பிரணாப் முகர்ஜியும் ஒருவர். அவருக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரனுடன் பிரணாப் முகர்ஜியை ஒப்பிட்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், கருணாகரனின் பல்வேறு சிறப்புகளை புகழ்ந்து கூறினார். கருணாகரனின் நினைவாக கருணாகரன் அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்