முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா: 6 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

காரைக்கால், டிச.--22 - திருநள்ளார் கோவில் சனிப்பெயர்ச்சி விழாவில் 6 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். நவ கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்று 21/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பவர் ஸ்ரீசனீஸ்வரபகவான். மத்தன் என்று அழைக்கப்படும் சனிபகவான் நேற்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் பிரவேசித்தார். உக்கிரக மூர்த்தியான சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக, சாந்த மூர்த்தியாக புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள தர்பராண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதி கொண்டு விளங்குகிறார். இங்கு சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமர்சையாக நேற்று நடந்தது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை 5 மணிமுதலே ஸ்ரீசனிஸ்வர பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. பால், தயிர், சந்தனம், திரவியம், பழம், பஞ்சாமிர்தம், நல்லெண்ணை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. சனிப்பெயர்ச்சியை குறிக்கும் வகையில் சரியாக காலை 7.51 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது. இந்த நேரத்தில் கவர்னர் இக்பால்சிங், திருவாடுதுறை ஆதினம் ஆகியோர் சனிஸ்வர சன்னிதியில் தரிசனம் செய்தனர். திருநள்ளாரில் சனிபகவானை ஒரு நாள் இரவு தங்கி வழிபட வேண்டும் என்பது ஜதிகம். இதனால் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் 19-ந் தேதி முதலே குவியத் தொடங்கினர். இதனால் காரைக்காலில் உள்ள அனைத்து விடுதிகளும் ஹவுஸ்புல்லாகவே காட்சி அளித்தது. விடுதிகளில் இடம் கிடைக்காதவர்கள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தங்கி இருந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் குவியத்தொடங்கினர். இதனால் திருநள்ளார் கோவிலில் 6 லட்சம் பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. ஸ்ரீசனீஸ்வர பகவானை தரிசிக்க தர்ம தரிசனம், ரூ.100, ரூ.300 கட்டண தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு நளதீர்த்தத்தில் நெரிசலின்றி குளிக்கும் வகையில் ஒரே நேரத்தில் பத்தாயிரம் பக்தர்கள் நீராட வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் ஒரு லட்சம் பக்தர்கள் குளத்தை சுற்றி நிற்கவும் வசதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிகாலையிலேயே பக்தர்கள் குளித்து சனிபகவானை தரிசிக்க நீண்ட கியூ வரிசையில் நின்றனர். பக்தர்கள் தங்கு தடையின்றி சனிஸ்வர பகவானை தரிசிக்கும் வகையில் அதிகாலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே உற்சவ மூர்த்தி தங்க காக வாகனத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். சனி பகவானை உரிய வாகனத்தில் இருந்து தரிசிப்பது அரிது என்பதால் பக்தர்கள் உற்சவ மூர்த்தியையும் தரிசித்து சென்றனர். எள் தீபம் ஏற்றி பரிகாரமும் செய்தனர். பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். நளன் குளத்தை சுற்றியும், கோவிலை சுற்றியும் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்களை கேமிரா மூலம் அறிந்து அந்த பகுதிக்கு போலீசார் சென்று நெரிசலை கட்டுப்படுத்தினர். மேலும் கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீசார் கண்காணித்தனர். பக்தர்களுக்கு தேவையான விவரங்களை தெரிவிக்க தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த 14 இடங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து கோவிலுக்கு வர டெம்போ, மினி வேன் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்