முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா தாக்கல் கமிட்டி: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 23 - லோக்பால் மசோதாவில் சில திருத்தங்கள் செய்து புதிய லோக்பால் மசோதாவை உருவாக்கி உள்ள மத்திய அரசு அதை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய மசோதாவின்படி லோக்பால் சட்ட பெஞ்சுகளில் 50 சதவீத இடங்கள் இட ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். அதே நேரத்தில் இதில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லு, ஐக்கிய ஜனதா தலைவர் சரத்யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித்த பிறகே லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து லல்லுவும், சரத்யாதவும் வலியுறுத்தினர். இந்த நிலையில் இந்த புதிய மசோதாவும் ஏற்கத்தக்கதாக இல்லை என்று ஹசாரே அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு கூடி இது குறித்து விவாதித்து வருகிறது. 

70 பக்கங்கள் கொண்ட இந்த மசோதாவில், லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கப்படும். 9 பேர் கொண்ட ஒரு தனி தலைமை அமைப்பு, அரசு அதிகாரிகளின் ஊழல், லஞ்சம் குறித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும். இந்த அமைப்பு பரிந்துரை செய்தால்தான் இந்த புகார் குறித்து லோக்பால் அமைப்பால் விசாரிக்க முடியும். தானாக எந்த அதிகாரி மீதும் லோக்பால் அமைப்பால் விசாரணை நடத்த முடியாது. மாநிலங்களில் லோக் அயுக்தா நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். லோக்பால் அமைப்பு நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டதாக இருக்கும். லோக்பால் அமைப்பு சி.பி.ஐ. யை கட்டுப்படுத்தாது. அதன் கட்டுப்பாடு தொடர்ந்து மத்திய அரசிடமே இருக்கும். சி.பி.ஐ.யின் புதிய இயக்குனரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோரை கொண்ட குழு தேர்வு செய்யும். அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. 

லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளின் விவரத்தை மட்டுமே சி.பி.ஐ லோக்பாலிடம் வழங்கும். லோக்பால் வரம்புக்குள் பிரதமர் கொண்டு வரப்படுவார். ஆனால் முழுமையாக அல்ல. சர்வதேச உறவு, பொது ஒழுங்கு, அணுசக்தி, விண்வெளி, உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் பிரதமர் எடுத்த முடிவுகள் பற்றி லோக்பால் விசாரிக்க முடியாது. மற்ற விவகாரங்களில் மட்டுமே பிரதமரை லோக்பால் கேள்வி கேட்க முடியும். அது போல எடுத்த எடுப்பில் பிரதமருக்கு எதிரான விசாரணையை லோக்பால் நடத்த முடியாது. இது குறித்து லோக்பால் சட்ட பெஞ்ச் முதலில் கூடி விவாதித்து முடிவெடுக்கும். 

இந்த பெஞ்சின் மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பேர் ஒப்புதல் தந்தால் மட்டுமே பிரதமரை விசாரிக்க முடியும். விசாரணை பகிரங்கமாக நடைபெறாது. ஒருவேளை புகார் தள்ளுபடி செய்யப்பட்டால் அதனை பகிரங்கப்படுத்த கூடாது. லோக்பால் சட்ட பெஞ்சுகளில் 50 சதவீத இடங்கள் இட ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெண்களுக்கு இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். முதலில் இதில் சிறுபான்மையினருக்கும் இடம் தர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. திருத்தப்பட்ட இந்த மசோதாவில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

லோக்பால் அமைப்பின் பதவிக்காலம் 5 ஆண்டு காலமாக இருக்கும். இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், மக்களவை சபாநாயகர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அரசு பரிந்துரைத்த சட்ட நிபுணர் ஆகியோரை கொண்ட குழு தேர்வு செய்யும். லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில்தான் கொண்டு வர முடியும். அதற்கு குறைந்தபட்சம் 100 எம்.பிக்கள் கையெழுத்திட்டு மனு தர வேண்டும். ஊழல் புகார் மீதான முதல் கட்ட விசாரணையை நடத்த இயக்குனர் நியமிக்கப்படுவார். வழக்குகளை தொடர தனியாக ஒரு இயக்குனரும் இருப்பார். இவ்வாறு புதிய லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  மாநிலங்களவையில் இன்றும் (வெள்ளிக் கிழமை) தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித்த பிறகே மசோதாவை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று லல்லு, சரத்யாதவ் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதால் மசோதாவின் மீதான விவாதத்தில் சூடு பறக்கும் என்று தெரிகிறது. மேலும் ஹசாரேவின் நெருக்கடிக்கு பணிந்து அவசர அவசரமாக இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் லல்லு கூறியுள்ளார். இதே போல் இந்த மசோதாவை ஆதரிக்க போவதில்லை என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவும் கூறி விட்டார். 

இதற்கிடையே மத்திய அரசு எதை செய்தாலும் எதிர்க்கும் ஹசாரே இந்த மசோதாவையும் ஏற்க முடியாது என்று அறிவித்து விட்டார். இதனால் அவரது போராட்டமும் தொடர போகிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற 3 ல் இரண்டு பங்கு எம்.பிக்களின் ஆதரவு தேவை. இதனால் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இதை நிறைவேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லோக்பாலில் எல்லா சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் லல்லு, முலாயம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகளின் ஆதரவை பெறும் வகையில் லோக்பால் பெஞ்சுகளில் சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு யோசித்து வருவதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்