முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு எதிராக பொய் சாட்சியை உருவாக்கி உள்ளது சி.பி.ஐ.-ஆ. ராசா

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, டிச. - 25 - எனக்கு எதிராக எனது முன்னாள் கூடுதல் தனி செயலர் ஆசீர்வாதம் ஆச்சார்யாவை பொய் சாட்சியாக சி.பி.ஐ. உருவாக்கி உள்ளது என்று ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் அரசு தரப்பு சாட்சிகளில் முக்கியமானவராக கருதப்படும் ஆசீர்வாதத்திடம் ராசாவின் வழக்கறிஞர் சுஷீல்குமார் குறுக்கு விசாரணையை தொடங்கினார். அப்போது அவர் குறிப்பிடுகையில்,  தன்னை கொலை செய்வதாக மிரட்டியவர் நீதிமன்றத்தில் ராசாவின் முன்னாள் தனி செயலாளர் ஆர்.கே. சந்தோலியாவின் அருகே அமர்ந்திருக்கிறார் என்று ஆசீர்வாதம் தெரிவித்தது வெறும் நாடகமாகும். ஜனவரி 2 ம் தேதி சந்தோலியாவின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்றார். அப்போது நீதிபதி ஓ.பி. ஷைனி, இதற்கு முன் எப்போதாவது ஆசீர்வாதம் தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்திருக்கிறாரா? அப்படி தெரிவித்திருந்தால் அது நீதிமன்றத்தில் பதிவாகி இருக்கும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பலருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்றார்.
அதன் பின்னர் சுஷீல்குமார் கேட்ட கேள்விகளுக்கு ஆசீர்வாதம் பதில் அளிக்கையில், அமைச்சர் ராசாவுடன் டெல்லியில் அவரது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு சில சமயம் காரில் சென்றுள்ளேன். அவர் பேசும் மொபைல் போன் அழைப்பையும் கவனித்துள்ளேன். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமியை தெரியும். அவரது வீட்டுக்கு சென்றுள்ளேன். அவரது மனைவியை சந்தித்து பேசியுள்ளேன் என்றார்.  அப்போது வழக்கறிஞர் சுஷீல்குமார், சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள 2 ஜி ஊழல் என்ற புத்தகத்தை காண்பித்து இந்த புத்தகத்தை பார்த்திருக்கிறீர்களா? ஊழல் குறித்து தைரியமாக தகவல் அளிப்பவர் ஆசீர்வாதம் என்று. இதில் ஏழாவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார். அந்த புத்தகத்தை வாங்கி பார்த்த ஆசீர்வாதம் இதுவரை பார்க்கவில்லை. எனது பெயரை ஒப்பிடும் போது அதில் எழுத்துப்பிழை உள்ளது. ஆகையால் இது எனது பெயரை குறிப்பிட்டதாக தெரியவில்லை என்று கூறினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ராசா தொடர்ந்து தொடர்பு வைத்திருந்ததாகவும் தனது சாட்சியத்தில் ஆசீர்வாதம் குறிப்பிட்டார். வழக்கில் அடுத்த விசாரணை ஜனவரி 2 ம் தேதி நடைபெறும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்