முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 26 - உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு  கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிற மதத்தினர்களும் சென்று வழிபட்டனர். ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்பட ஐரோப்பா நாடுகளில் கிறிஸ்துமஸ் விழாவை மக்கள் மிகவும் விமர்சையாக கொண்டாடினர். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் இத்தாலி,ஸ்வீடன்,ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் அதிகமானோர் உள்ளனர். ரோமன் கிறிஸ்துவ தலைமையிடமான வாடிகனில் நேற்றுமுன்தினம் இரவில் இருந்தே கிறிஸ்துமஸ் விழா தொடங்கிவிட்டது. போப்ஆண்டவரிடம் பாதிரிமார்களும் பேராயர்களும் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிறிஸ்தவ சி.எஸ்.ஐ. பிரிவினர் அதிகம் உள்ளனர். அவர்களும் கிறிஸ்துமஸ் விழாவை படுஜோராக கொண்டாடினர். இதைத்தவிர இதர நாடுகளிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கெல்லாம் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். உலக மக்கள் சுபிட்சத்துடன் வாழ ஏசு பிரானை அவர்கள் வேண்டிக்கொண்டனர். புத்தாடை உடுத்தியும் விதவிதமான பலகாரங்கள் செய்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர். இந்தியாவிலும் கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கின்றனர். தலைநகர் டெல்லி, மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் விழா இருந்தது. வேளாங்கண்ணியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த இரண்டு நாட்களாக பிரார்த்தனை தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழகத்தின்  அண்டை மாநிலமான கேரளாவிலும் கிறிஸ்துமஸ் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். கேரளாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4-ல் ஒரு பாகம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் வடகிழக்கு மாநிலங்களைப்போல் கேரளாவிலும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக இருந்தது. அனைத்துத்தர மக்களும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்