முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தவேண்டும் பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 26 - முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தவேண்டும் என்றும், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்றும், முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சிறப்பு நிதியை தமிழகத்திற்கு அளிக்கவேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா முதலவராய் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று வந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் வரவேற்றார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் சென்றார். அங்கு பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். பிரதமருடனான முதல்வரின் சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது. இந்த சந்திப்பின்போது தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர். பிரதமரிடம் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் அடங்கிய 16 பக்கங்கள் உள்ள கோரிக்கை மனு ஒன்றை முதல்வர் அளித்தார். இதில் முக்கியமாக முல்லை பெரியாறு பிரச்சினை அடங்கியதாகும். இம்மனுவில் கூறியிருப்பதாவது:- முல்லைப் பெரியாறு பிரச்சினை தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினையாக உள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த 27.2.2006-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி உத்தரவிட்டது. அத்துடன் அணை முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநில அரசானது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், கேரள அரசானது தனது 18.3.2006-ம் தேதி பாசன மற்றும் நீர்பாதுகாப்பு சட்டத்திற்கு திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அதில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக தீர்மானித்துள்ளது.  மேலும் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின் படி சிறப்பு அதிகாரமுள்ள உயர்மட்டக்குழு வரும் 2012 பிப்ரவரியில் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டக்குழு பல்வேறு விதமாக பல துறை நிபுணர்களின் உதவியுடன் அணையைப் பார்வையிட்டு அணைமிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் தீர்மானித்துள்ளது. ஆனாலும் கேரள அரசானது அணையின் பாதுகாப்பு குறித்து தேவயற்ற வதந்திகளைப் பரப்புவதுடன் கடந்த9.12.2011 அன்று மாநில சட்டப் பேரவையிலும் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கவும், பழைய அணையை இடித்துவிட்டு புதிய அணையைக் கட்டவும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் கடந்த நான்கு மாத காலத்தில் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் இது கூட தவறான தகவலாகும். இந்த பிரச்சினையில் கேரளாவில் உள்ள தமிழர்கள் போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே நான் தங்களுக்கு 23.11.2011, 29.11.2011, 4.12.2011 ஆகிய தேதிகளில் கடிதங்கள் எழுதியுள்ளேன். அணை பகுதியைப் பாதுகாக்க மத்திய தொழில் படை அனுப்ப வேண்டும் என்றும் கோரியுள்ளேன்.

இது குறித்து தமிழக சட்டப் பேரவையும் கடந்த 15-ம் தேதியன்று நிறைவேற்றிய தீர்மானத்தில் உச்சநீதிமன்றத்தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்றும், அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அதே நேரத்தில் அணைப் பகுதியில் 1979 முதல் ஆக்கிரமிப்புகளும் நடக்கிறது. இது குறித்து கேரள அரசானது எந்தவிதமான நடவடிக்கையும எடுக்கவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

இச்சூழலில் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு கடந்த 12.12.2011-ல் நிபுணர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அது அணை குறித்து பலவிதமாக ஆராயும் என்றும் கூறப்பட்டுள்ளது. இச்செயலானது ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் சிறப்பு அதிகாரம் குழுவின் விசாரணையைக் கேளிக்கூத்தாக்கும் செயலாகும்.

இச்சூழலில் தமிழக அரசானது கீழ்க்கண்ட விஷயங்களில் தங்களின் மேலானத் தலையீட்டை கோருகிறது. 

அணையின் நீர்மட்டத்தை 136-லிருந்து 142 அடியாக உயர்த்தவேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை கேரள அரசு மதிக்க வேண்டும் என்று நீங்கள் அறிவுத்தவேண்டும்.

அணை பாதுகாப்பாக இருப்பதால் புதிய அணையைக் கட்டவேண்டும் என்ற கேரள அரசின் முடிவு கைவிடப்பட  அறிவுறுத்தவேண்டும்.

மத்தியில் நீர்பாசன ஆணையத்தின் பணியை குலைப்பதிற்கு பதிலாக தமிழக அரசுடன் இணைந்து அதன் பணிகளை வலுப்படுத்தவேண்டும்.

அணைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற கேரள அரசுக்கு உத்தரவேண்டும்.

அணைப்பகுதிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்பவேண்டும்.

உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின், நிபுணர்குழு அமைக்க உள்ள அறிவிப்பாணையை திரும்ப பெறவேண்டும்.

இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு கேரள அரசுக்கு அறிவுறுத்தவேண்டும்.

இத்துடன் தமிழகம் முத்தைய அரசின் செயலால் ரூ.1 லட்சம் கோடி அளவில் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும், ரூ.3 கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், மேற்கு வங்க அரசுக்கு அளித்தது போல சிறப்பு நிதியை மத்திய அரசு தமிழக அரசுக்கு அளிக்கவேண்டும். 

தற்போது மத்திய அரசு கொண்டுவரவுள்ள உணவு பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு பொறுந்துவதாக இல்லையென்றும், ஏற்கனவே இங்கு மாநில அரசு உணவு பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், அனைவருக்கும் இலவச அரிசி திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருதவதாகவும், சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதாவில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று முதல்வர் கோரியுள்ளார்.

மேலும் மின்வெட்டில் தவிக்கும் தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அளிக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்