முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமானுஜத்தின் பிறந்தநாள் தேசிய கணித நாள்: பிரதமர்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

காரைக்குடி,டிச.27  - ராமானுசன் போன்ற கணித மேதைகளின் சிந்தனைகளை எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் கணித மேதை ராமானுசனின் 125-வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ராமானுசன் உயர் கணித மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக கவர்னர் ரோசய்யா தலைமை தாங்கினார். விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு உயர் கணித மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கணித மேதை ராமானுசத்தின் பெயரை தாங்கி இருக்கின்ற இவ்மையத்தை துவக்கி வைப்பதன் மூலம் அவருக்கு புகழஞ்சலி செலுவத்துவதில் பெருமை அடைகிறேன். தமிழகம் மற்றும் இந்தியாவினுடைய பெருமை மிகு திருமகனாக திகழும் ஸ்ரீநிவாச ராமானுசம், உலகம் தரமிக்க கணித மேதையாவார். வறுமையின் காரணமாக கணிதத்தில் அவர் குறைந்த பயிற்சியை பெற்றிருந்தபோதிலும் தனது தனித்திறமையின் காரணமாக கணித துறையில் அவர் புகழ் பெற்று விளங்கினார். ராமானுசத்தின் 125-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடிக்கொண்டியிருக்கும் இந்த வேலையில் அவருடைய பெயரில் இந்த உயர் கணித மையம் அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மற்றொரு விழாவில் நான் கலந்துகொண்டு பேசும்போது ஒவ்வொரு ஆண்டும் ராமானுசத்தின் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அரசு கொண்டாட முடிவு செய்திருப்பதையும் 2012 முதல் அவருடைய பிறந்த நாள் கணித ஆண்டாக அனுசரிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அழகப்பா பல்கலைக்கழகம் தனது வெள்ளி விழாவை சென்றாண்டு கொண்டாடி முடித்திருப்பதாக அறிகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகள் புரிந்த இப்பல்கலைக்கழகத்தை வாழ்த்துகிறேன். இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர் பெருமக்களும் பல்வேறு விருதுகளை பெற்று பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்தில் இப்பல்கலைக்கழகம், தேசிய தர நிர்ணயக்குழுவின் மறுமதிப்பீட்டில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றிருக்கிறது என்பதை அறிகிறேன். இதற்காக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இனி வரும் காலங்களிலும் பல்கலைக்கழகம் மேலும் சிறப்பாக செயல்படும் என்று வாழ்த்துகிறேன். 

வள்ளல் அழகப்பா செட்டியாரின் கனவு நிறைவேறும் வகையில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டமான சிவகங்கையில் கலை, அறிவியல், பொறியியல், உடற்கல்வியியல் ஆகிய பல்வேறு வகையான கல்வி நிறுவனங்கள் அமைவதற்கு காரணமாக இருந்தவர் அழகப்பா செட்டியார் ஆவார். 1948-ம் ஆண்டு ராமானுசம் பெயரில் ஒரு கணித மையத்தை தொடங்க வேண்டும் என்பது அழகப்பா செட்டியாரின் கனவாக இருந்தது. தற்போது அது நினைவாகி உள்ளது. இத்தருணத்தில் நான் உங்களோடு சேர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கணிதவியலுக்கு நம்மாட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் இத்துறையில் நம்நாடு மிகவும் சிறப்பு பெற்று விளங்கியது. இந்த பாரம்பரியத்தை ஊக்குவித்து வளர்ப்பது நமது கடைமையாகும். ஆர்யபட்டா, பிரமகுப்தா மற்றும் ராமானுசர் போன்ற மிகச்சிறந்த கணிதமேதைகளின் சிந்தனைகளை எதிர்காலத்தில் எடுத்துச்செல்வது நமது கடமையாகும். காரணம் என்னவெனில் கணிதம் பிற துறையை சேர்ந்த கல்வியினை பெறுவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்கிறது. நான் இன்று (நேற்று) காலையில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் இந்தியா சிறந்த கணித வல்லுனர்களை உருவாக்குவதில் பின்தங்கியுள்ளது என்று குறிப்பிட்டேன். ஆகவே மாணவர்கள் கணிதத்தை ஒரு முக்கிய பாடமாக கற்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இந்த மையம் நம்நாட்டின் இந்த பகுதியை சேர்ந்த மாணவர்களின் கணிதவியல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

ராமானுசர் உயர் கணித மையத்திற்கான கட்டிடத்தை கட்டுவதற்கு தாராளமாக நிதியுதவி வழங்கிய இந்திய திட்டக்குழு உறுப்பினர் முனைவர் கஸ்தூரி ரங்கனை உளமார பாராட்டுகிறேன். 

அழகப்பா பல்கலைக்கழகமும் ராமானுசன் உயர் கணித கல்வி மையமும் சிறப்பாக வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். 

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், இந்திய திட்டக்குழு உறுப்பினர் முனைவர் கஸ்தூரி ரங்கன், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு தலைவர் முனைவர் வேதப்பிரகாஷ், சுற்றலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட கலெக்டர் ராசாராமன், எம்.எல்.ஏ.க்கள் சோழன் பழனிசாமி, பெரியகருப்பன், துணைவேந்தர் சுடலைமுத்து, பதிவாளர் (பொறுப்பு) மணிமேகலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்