முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருக்கு கறுப்புகொடி: விஜயாகாந்த் கைதாகி விடுதலை

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.27 -​​பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது கட்சித் தொண்டர்களை போலீசார் நேற்று கைது செய்து விடுதலை செய்தனர். தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர், கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார். நேற்று காலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.  முல்லை பெரியாறு அணை பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனை குறித்து மத்திய அரசு மவுனம் சாதிப்பதாகவும், அதனால் தமிழகம் வரும் பிரதமருக்கு தேமுதிக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை 9 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் சைதாப்பேட்டை பனகல் மாளிகையிலிருந்து கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலமாக கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.

இந்த ஊர்வலம் சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகே வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கவர்னர் மாளிகை நோக்கி விஜயகாந்த் செல்ல முயன்றபோது போலீசார் விஜயகாந்தையும், தேமுதிக எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி, மாஃபா பாண்டியராஜன், அனகை முருகேசன் மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், ஆஸ்டின், சவுந்தரபாண்டியன், ஈஸ்வரன், வேணு ராம் மற்றும் கட்சி தொண்டர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாநகர பேருந்து களிலும், போலீஸ் வேன்களிலும் ஏற்றப்பட்டு தி.நகர் தெற்கு போக் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டனர்.

பின்னர் பகல் சுமார் 12.15 மணியளவில் விஜயகாந்த் மற்றும் கட்சி தொண்டர்களை போலீசார் விடுதலை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்