முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா மீதான விவாதம் துவங்கியது

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.28 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா மீதான விவாதம் நேற்று லோக் சபையில் துவங்கியது. இந்த விவாதத்தை மத்திய அமைச்சர் நாராயணசாமி துவக்கிவைத்தார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா கடந்த 22-ம் தேதி பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் சில முக்கிய அம்சங்கள் இடம் பெறாதது குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. 

இதேபோல வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வராவிட்டால் தான் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த சமூக சேவகர் அன்னா ஹசாரேவும் தனது 3 நாள் உண்ணாவிரதத்தை நேற்று துவக்கினார்.

இந்த நிலையில் கடந்த 22 ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதா மீதான விவாதம் நேற்று லோக் சபையில் துவங்கியது. 

இந்த விவாதத்தை பிரதமர் அலுவலகத்திற்கான மத்திய அமைச்சரும் மத்திய வேலை வாய்ப்புத் துறை அமைச்சருமான நாராயணசாமி நேற்று துவக்கி வைத்துப் பேசினார்.

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டியது பாராளுமன்றம்தான்.  இதில் பாராளுமன்றம்தான்  தலையாய அமைப்பு. பாராளுமன்றத்திற்கு  நாங்கள் தலை வணங்குவோம். மற்றபடி யாருக்கும் நாங்கள் தலை வணங்க மாட்டோம் என்று நாராயணசாமி கூறினார்.

குறிப்பாக அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு  தலை வணங்க மாட்டோம் என்பதை அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் தொடர்பான குற்றங்களை செய்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஒப்பற்ற அம்சங்கள் லோக்பால் மசோதாவிலும் லோக் அயுக்தா மசோதாவிலும் இடம் பெற்றுள்ளன என்றும் அவர் விவரித்தார்.

நாராயணசாமி இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் எழுந்து இந்த மசோதா இந்திய கூட்டாட்சி முறையின் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல் என்று கூறினார்.

அப்போது அரசுக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.  கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்