முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா ராஜ்ய சபையில் நிறைவேறுமா?

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.29 - லோக்சபையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா ராஜ்ய சபையில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.  இந்த மசோதாவை ராஜ்ய சபையில் நிறைவேற்ற பா.ஜ.க. வின் ஆதரவை மத்திய அரசு கோரி வருகிறது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா கடந்த 22-ஆம் தேதி பாராளுமன்றத்தின் லோக் சபையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது நீண்ட விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு பிறகு லோக் சபையில் இந்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் கூட இந்த மசோதா ராஜ்ய சபையிலும் நிறைவேற்றப்பட்டால்தான் அது ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று பிறகு சட்டமாகும்.

மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்ய சபையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு  101 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது.  அந்த வகையில் பார்க்கும்போது லோக்பால் மசோதா ராஜ்ய சபையில் நிறைவேற ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மேலும் 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 

இதனால் ராஜ்ய சபையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

இந்த நிலையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க.வின் ஆதரவை மத்திய அரசு நாடியிருக்கிறது. 

இது தொடர்பாக ராஜ்ய சபையின் எதிர்க்கட்சி  தலைவரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அருண் ஜேட்லியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்து இது தொடர்பாக ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது.

லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ள ஒரு அம்சத்தில் பா.ஜ.க., இடது சாரிகள், பிஜூ ஜனதா தளம், அ.தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. அப்படி இருக்கும்போது இந்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு  பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி,  ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.  இந்த கட்சிகளிடம் மட்டும் 27 எம்.பி.க்கள் உள்ளன.

ஆனால் லோக் சபையில் லோக்பால் மசோதா ஓட்டெடுப்பிற்கு வந்தபோது இந்த கட்சிகள் எல்லாம் வெளிநடப்பு செய்துள்ளன. அப்படிப்பட்ட நிலையில் இந்த கட்சிகளின் ஆதரவை பெறுவது என்பது சற்று கடினமான காரியமாக இருக்கிறது. 

இந்த கட்சிகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாததால்தான் அரசியல்சாசன திருத்த மசோதாகூட லோக் சபையில் தோல்வி அடைந்தது.

எனவே ராஜ்ய சபையில் லோக்பால் மசோதா நிறைவேறுமா என்பதும் பா.ஜ.க.வின் ஆதரவு யாருக்கு என்பதும் இன்னும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்