முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபையில் பிரதமர் இல்லாததால் அமளி - ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.30 - ராஜ்யசபையில் நேற்று லோக்பால் மசோதா விவாதத்தின்போது பிரதமர் இல்லாததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் லோக்சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று ராஜ்யசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று காலை தொடங்கியது. அப்போது பல்வேறு அரசியல்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினர். ஆனால் அப்போது ராஜ்யசபையில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லை. லோக்பால் விவாதத்தின்போது ராஜ்யசபையில் பிரதமர் இல்லாததற்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பிரதமர் இந்த சபைக்கு வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை எழுப்பினர். பாராளுமன்ற விவகாரத்துக்கான இணை அமைச்சர் நாராயணசாமி லோக்பால் மசோதாவை தாக்கல் செய்த உடனே இந்த பிரச்சனையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர். அப்போது எங்கே பிரதமர் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ராஜ்யசபையின் அவை முன்னவராகவும் பிரதமர் இருக்கிறார். அப்படிப்பட்டவர் ஏன் சபைக்கு வரவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது குறுக்கிட்டு பேசிய சபையின் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் ராஜ்யசபைக்கு வந்துகொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் அவர் வந்துவிடுவார் என்று உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார். ஆனாலும் பிரதமர் வரவில்லை. இதனால் பா.ஜ.க. எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த அமளியையும் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அருண் ஜேட்லியை விவாதத்தில் கலந்துகொண்டு பேசுமாறு அன்சாரி கேட்டுக்கொண்டார். ஆனால் அருண் ஜேட்லி பேச முடியாத அளவுக்கு சபையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதையடுத்து சபையை 10 நிமிடங்களுக்கு சபைத்தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். அதன்பிறகு 10 நிமிடங்கள் கழித்து பிரதமர் சபைக்கு வந்ததும் லோக்பால் மசோதா மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்