முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப காங்கிரஸ் முடிவு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.30 - லோக்பால் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற போது மக்களவைக்கு வராத காங்கிரஸ் எம்.பிக்கள் 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார். லோக்பால் மசோதாவிற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா மக்களவையில் மூன்றில் இரு பங்கு ஆதரவு இல்லாததால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் எம்.பிக்கள் 13 பேரும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 7, 8 உறுப்பினர்களும் அவைக்கு வரவில்லை. இது காங்கிரஸ் தலைமைக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவைக்கு வராத காங்கிரஸ் உறுப்பினர்கள் யார், யார், அவர்கள் வராததற்கான காரணம் என்ன ஆகிய விவரங்களை சேகரித்து தருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மத்திய பணியாளர் நல துறை இணையமைச்சர் நாராயணசாமி கூறுகையில், 

மசோதா தாக்கல் செய்த போது அவைக்கு வராத எம்.பிக்களின் செயலை காங்கிரஸ் தலைமையும், கட்சியின் நாடாளுமன்ற தலைமையும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. அவர்கள் வந்திருந்தால் லோக்பால் மசோதாவுக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்து இருக்கலாம். கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தும் அவைக்கு வராதது நிலைமையின் தீவிரத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அவைக்கு வராதவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார். 

வாக்கெடுப்பின் போது அவைக்கு வராதவர்களில் மத்திய அமைச்சர் தின்ஷா படேலும் ஒருவர். அவைக்கு வராதது குறித்து கருத்து தெரிவித்த தின்ஷா, தனது பேத்தியின் திருமணம் காரணமாக தன்னால் வர இயலவில்லை என்றும், இது குறித்து பவன்குமார் பன்சாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். அப்படியே வந்திருந்தாலும் திருத்த மசோதாவுக்கு தேவையான பெரும்பான்மை ஆதரவுக்கான எண்ணிக்கையை எட்டியிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்