முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. மீது மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷீத் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. டிச. 31 - ராஜ்ய சபையில் லோக்பால் மசோதா நிறைவேறாததற்கு பா.ஜ.க. வே காரணம் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ராஜ்ய சபையில் லோக்பால் மசோதா நிறைவேறாததற்கு பா.ஜ.க.வே காரணம் என்றார். லோக்பால் மசோதாவை ராஜ்ய சபையில்  இதே குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. கோரியது. மேலும் இந்த மசோதா குறித்து குறுகிய காலத்தில் விவாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறி வந்த பா.ஜ.க. கடைசி நேரத்தில் இந்த மசோதா குறித்து மாறுபட்ட முடிவை எடுத்தது ஏன் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் இது குறித்து அந்த கட்சி தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

லோக்பால் மசோதா குறித்த தங்களது கருத்துக்களை விவாதம் நடப்பதற்கு முன்பே  பா.ஜ.க. தலைவர்கள் அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து கடைசி நேரத்தில்  திருத்தங்களை கொண்டு வந்தால்தான் இது குறித்து பேசுவோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறியுள்ளது நியாயமற்றது என்றும் அவர் கூறினார்.

ராஜ்ய சபையில் லோக்பால் மசோதா நிறைவேறாதது குறித்து அன்னா ஹசாரே குழுவினர் வெளியிட்டுள்ள விமர்சனத்திற்கு  அமைச்சர் சல்மான் குர்ஷீத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லோக் சபையில் இந்த மசோதா நிறைவேற கூடாது என்று எண்ணியதே அந்த குழுவினர்தான். அப்படி இருக்கும் போது ராஜ்ய சபையில் இந்த மசோதா நிறைவேறாதது குறித்த அவர்களின் விமர்சனம்  அதே வகையை சேர்ந்ததுதான் எனறும் அவர் கூறினார்.

ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி தான் சொல்ல வந்ததை 10 நிமிடத்தில் சொல்லியிருந்தால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கும்.  ஆனால் அவர் பேச மறுத்து விட்டார் என்றும் குர்ஷீத் கூறினார்.

விவாதமே நடத்தாமல் நேரடியாக ஓட்டெடுப்புக்கு விட கூட பா.ஜ.க. சம்மதித்து இருக்கலாம். அப்படி செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்