முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்கள் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.20.20 கோடி நிதி

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - வேலை வாய்ப்பற்ற இளைஞர் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் ஆயோரின் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த ரூ.20 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் தேர்வாகும் பயிற்சியாளருக்கான பரிசுத் தொகையை ரூ.25  ஆயிரமாக உயர்த்தியும், முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள் மேற்படிப்பினைத் தொடர மாதர் தோறும் வழங்கப்படும் உதவித் தொகையை 500 ரூபாயாக உயர்த்தியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழைப்பே உயர்வு என்ற முதுமொழிக்கேற்ப, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைபவர்கள் தொழிலாளர் பெருமக்கள் ஆவர்.  தொழிலாளர்களின் உண்மையான முன்னேற்றமே நாட்டின் முழுமையான வளர்ச்சியாகும். உற்பத்தியை மென்மேலும் பெருக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை விரைவுப் படுத்துவதற்கும், தொழிலாளர்களின் பங்கு இன்றியமையாதது.

நம் மாநிலத்தின் தொழிலாளர்களுக்கு, மாறிவரும் புதிய தொழில் நுட்பங்கள் பற்றி அவ்வப்பொழுது உரிய பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் குறைந்த செலவில் தொழில் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதையும்,  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும்,   தொழிற்சார்ந்த திறன் எய்தும் பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம், மனிதவள தேவைகளை ர்த்தி செய்ய இயலும் என்பதையும் உணர்ந்து, அதன் அடிப்படையில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு சங்கத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

15,000 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் எய்தும் பயிற்சி அளிப்பதற்காக 6 கோடி ரூபாயும், அரசு கலை​அறிவியல் கல்லுரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கலை ​அறிவியல் கல்லுரிகள் ஆகியவற்றில் பயிலும் 25,000 மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி வழங்க 7 கோடியே 50 லட்சம் ரூபாயும், பயிற்றுநர்களுக்கான பயிற்சி திட்டத்திற்காக 50 லட்சம் ரூபாயும் அனுமதித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். 

மேலும்,  உயர் தொழில் நுட்பங்களான வானூர்தி பராமரிப்பு, உற்பத்தி சார்ந்த துறை, கப்பல் துறை மற்றும் அதுசார்ந்த சேவை பிரிவுகளில் இளைஞர்களைப் பயிற்றுவிக்க உலகத்தரம் வாய்ந்த ஒரு பயிற்சி மையம் தனியார் பங்கேற்புடன் அமைப்பதற்கு முதற்கட்டமாக, 25 லட்சம் ரூபாய் அனுமதித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களின் அறிவுத்திறன் மேம்பட மின்னணு பாடமுறை மற்றும் பணிச் சூழலின் மாதிரி அடிப்படையிலான பயிற்சியினை  அறிமுகப்படுத்த 50 லட்சம் ரூபாய் அனுமதித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். 

மேலும், திறன் பயிற்சி பெறுபவர்கள், தம்மிடையே பெருமித உணர்வைப் பெறும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலிருந்து தேர்ச்சி பெற்று வெளி வரும் மாணவர்களுக்கும், குறுகியகால தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கும், அரசு முத்திரையுடன் கூடிய திறன் அடையாள அட்டை வழங்குவதற்காக 25 லட்சம் ரூபாய் அனுமதித்து தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  தரம் மிக்க பயிற்றுநர்களைத் தொடர்ந்து உருவாக்கும் நோக்குடன் பயிற்றுநர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் ஒன்றை உருவாக்க,  முதற்கட்டமாக 25 லட்சம் ரூபாய் அனுமதித்தும், மாநிலத்தில் தொழில் திறன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கவும், பராமரிக்கவும், தமிழ்நாடு மாநில திறன் பதிவுத் தொகுப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு  15 லட்சம் ரூபாய் அனுமதித்தும், தனியார் துறையில் பதிவுதாரர்கள் பணி நியமனம் பெறுவதற்கு உதவி புரியும் வகையில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், ஒரு தனியார் துறை பணி நியமன உதவி பிரிவு தொடங்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். 

தகுதி வாய்ந்த விருப்பமுள்ள இளைஞர்களை தேர்வு செய்ய வருகைத் தரும் தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதில் பங்கேற்க வருகைத் தரும் இளைஞர்களின் வசதிக்காக, மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கிட 1 கோடியே 93 லட்சம் ரூபாயும், மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணியாளர்களின் ஊதியம், இத்திட்டத்திற்கான ஆலோசகரின் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளுக்காக 2 கோடியே 17 லட்சம் ரூபாயும், இத்திட்டத்தினை விளம்பரப்படுத்தவும், கூட்டங்களை நடத்தவும், மனித வள தேவையினை கண்டறியவும் 70 லட்சம் ரூபாயும் ஒதுக்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலே குறிப்பிட்ட திட்டங்களுக்காக மொத்தம் 20 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர்  உத்திரவிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மனிதவளத்தினை மேம்படுத்துவதற்காக, இதில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பல்வேறு தொழிற்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு இடையே போட்டித் திறனை மேம்படுத்துவதற்காகவும், 18 தொழிற்பிரிவுகளில் நடத்தப்பட்டு வரும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் ஒவ்வொன்றிலும், சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுபவருக்கு, தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரொக்கப் பரிசுத் தொகையினை 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம்,  கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று தொழில் நுட்பக் கல்லூரி/தொழிற்பயிற்சி நிலையம்/ இளங்கலை பட்டம்/ பொறியியல் படிப்பு/ பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் ஆகிய மேற்படிப்பினை தொடர, முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியை, 250 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி படிப்பு காலம் முழுமைக்கும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 317 பேர் பயனடைவர். இதனால் அரசுக்கு 19 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகளினால், மனிதவளம் மேம்பாடு அடைந்து, வருங்காலத்தில் திறமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள் உருவாவதற்கு வழி வகை ஏற்படும். இதனால் தொழில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago