முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் ஜன.28-ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம்

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல்கள் நடத்துவதைக் கண்டித்து திருச்சியில் வரும் 28-ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உயிர்களை நாம் பறிகொடுத்துள்ளோம். பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மத்திய அரசு அவ்வப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு, உயிரிழந்து வருவதை வழக்கம்போல் வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குகிறபோது நமது கடற்படை என்ன செய்துகொண்டு இருக்கிறது. நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தா வண்ணம் நமது கடற்படை பாதுகாப்பு அளிக்கக்கூடாதா? தமிழக முதலமைச்சர் சொல்லிவருவதுபோல தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு கருதவில்லையா? நாம் கச்சத்தீவை பறிகொடுத்து தான் இத்தகைய சூழல் ஏற்படுவதற்கு காரணம் என்பதை நாம் உணர்ந்து வேதனைப்படுகிறோம்.

இன்று கச்சத்தீவு பகுதிகளில் நம் இந்திய கடற்பகுதியில் நமது மீனவர்கள் மீன் பிடித்தால் கூட இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதள்களில் ஈடுபட்டு வருகின்றனர். போர் அபாயம் ஏற்படக்கூடும் என்று கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் கடற்பகுதிகளில் கூட நம் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதில்லை. ஆனால் நமது நேச நாடு என்று கூறிக்கொண்டே தமிழினத்தை அழித்துவரும் இலங்கை அரசு நம் தமிழக மீனவர்களையும் தாக்கி வருகின்றனர்.

இலங்கை கடற்படை நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய போது ரவுடிகளைப்போல் கற்களையும், உருட்டுக்கட்டைகளையும் பயன்படுத்தி உள்ளனர். 50 படகுகளில் வந்து தாக்கியதாக தெரிகிறது. தமிழக மீனவர்களை மீன் வளம் நிறைந்த பகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களிடமிருந்து நம் மீனவர்களை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு கைகட்டி வாய் பொத்திக்கொண்டு இருக்கிறது.

அதேபோன்று முல்லைப்பெரியார் பிரச்சினையில் கேரள அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாதது மட்டுமின்றி, அந்த உத்தரவுக்கு எதிராக 142 அடி தண்ணீர் தேக்கி வைப்பதற்கு பதிலாக அதை 120 அடியாக குறைக்கவேண்டும் என்று மனு கொடுக்கிறார்கள். கேரள அரசின் இந்த செயலை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதேபோல் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்காமை என்று எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நம் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

எனவே நம் தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் விதமாக, வருகிற ஜனவரி 28 சனிக்கிழமையந்று திருச்சி மாநகரில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் எனது தலைமையில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் எந்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்